திருவள்ளூர்: 26 வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் சேறும் சகதியாக மாறிய சாலையால் பொதுமக்கள், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவள்ளூர் ஒன்றியம், பெருமாள்பட்டு பட்டு பகுதியில் இருந்து 26 வேப்பம்பட்டு பகுதிக்குச் செல்பவர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்பவர்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்துதான் செல்ல வேண்டும். இந்த, வழியாக தினமும் ஏராளமான மக்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், 26 வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் பல ஆண்டுகளாக மேம்பாலம் கட்டித்தர வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த 6 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. தற்போது, ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் சாலையில் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு பாலம் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டு, அந்த பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை அதே இடத்தில் கொட்டியுள்ளதால், அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய நிலைமை உள்ளதால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். மேலும், இந்த வழியாகச் செல்லும் அரசு பேருந்துகளும் தற்போது மேம்பாலப் பணியால் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள மண் சாலை முழுவதும் பரவி சேறும், சகதியுமாக காணப்படுவதால், அவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், மாணவ - மாணவிகள், முதியோர்கள் பெரும் அவதிக்குள்ளாகுவதோடு, வழுக்கி விழும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
மேலும், மந்தமாக நடைபெற்று வரும் பணியை துரிதப்படுத்தவும் தற்காலிகமாக சாலையில் உள்ள சேற்றை அகற்றி சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.