‘‘தேஜ கூட்டணியில் இருந்து வெளியே வந்துட்டதா தேனிக்காரர் தடாலடியா சொன்னதை கேட்டு, அவரது ஆதரவு மாஜி அமைச்சர் ஒருத்தர் ரெய்டு பீதியில் இருக்காராமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சிய மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் ‘வைத்தியானவர்’ தேனிக்காரர் அணியில் இருந்து வர்றார். சமீபத்தில், பிரிந்து கிடக்கும் நாங்கள் எல்லாம் மிக விரைவில் இணைந்து விடுவோம் என தெம்புடன் தெரிவித்தாராம்.. ஆனால், தேனிக்காரர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் எடுத்துள்ள தடாலடி முடிவால் வைத்தியானவர் உள்பட பல நிர்வாகிகள் என்ன பேசுவது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்காங்களாம்..
டெல்லி மேலிடத்தை பகைத்துக்கொண்டால் ஏதாவது ரெய்டு வந்து விடுமோ என்ற அச்சத்தில் வைத்தியானவர் இருந்து வர்றாராம்.. இதை எப்படி சமாளிப்பது என்றே அவர் யோசனையில் இருக்காராம்.. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தேனிக்காரர் அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடம் சேலத்துக்காரர் அணியை சேர்ந்த மாஜி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக பேசிக்கிறாங்க.. இன்னும் சில வாரங்களில் இந்த அதிரடி நிகழ்வுகள் நடந்தாலும் ஆச்சரியம் இல்லை என அரசல்புரசலாக பேச்சு ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பங்காளி சண்டையை பிறகு பார்த்துக்கலாம் என்ற குக்கர்காரர், இப்போ போகாத ஊருக்கு வழி சொல்ற கதை மாதிரி பதில் சொல்றாருன்னு நிர்வாகிகள் புலம்பறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தில் குக்கர் தரப்பு கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்திருக்கு.. இதில், பேசிய பெரும்பாலான நிர்வாகிகள் கூட்டணி குறித்து பேசினார்களாம்.. குறிப்பாக சிலர், ‘இலைக்கட்சி தலைவர் நாம் கூட்டணியில் இருப்பதை ஏற்க மறுத்து பேசி வர்றார்.. நாம் இலைக்கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்றே தெரியவில்லை..
நீங்கள்தான் பங்காளி சண்டையை பிறகு பார்த்துக்கலாம் என பேசினீர்கள்.. ஆனால், அவங்க நம்மளை மதிப்பதாக தெரியலை... அவங்களை அரவணைப்பதா, இல்லை விலகிச் செல்வதா..’ என சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்காங்க.. பலரது கேள்விகளையும் கவனித்துக் கொண்டிருந்த குக்கர்காரர், கடைசியில் சொன்ன பதில் அனைவரையும் ஆச்சர்யம் அடைய வைத்ததாம்.. ‘நாம் இலைக்கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை. மலராத கட்சியுடன்தான் கூட்டணியில் உள்ளோம். அவர்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் பிரச்னையில்லை.. அது அவங்க இஷ்டம்..
நம்ம கட்சி நிர்வாகிகள் மலராத கட்சியினரின் மனம் நோகாத வகையில் நடந்துக்க வேண்டும்.. அவ்வளவுதான் மேட்டர் சிம்பிள்..’ என கூலாக பதிலளித்தாராம்.. தலைவரோட விளக்கம் போகாத ஊருக்கு வழி சொல்ற கதை மாதிரில்ல இருக்கு என கூட்டத்திற்கு வந்த கட்சியினர் புலம்பிக் கொண்டே சென்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தனது இமேஜை நிரூபிக்கவே கூட்டணியில் இருந்து தேனிக்காரர் வெளியே வந்துவிட்டாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலராத தேசிய கட்சியும், இலைக்கட்சியும் மீண்டும் ஒட்டிக்கொண்ட நிலையில் தமிழ்நாடு வந்த பிரதமர் சேலம்காரரை மட்டும் சந்தித்துவிட்டு போயிட்டார். அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேனிக்காரர் நேரம் கேட்டும் அவருக்கு டைம் கொடுக்காமல் ஒதுக்கிவிட்டுட்டாங்க.. இதனால் அதிர்ச்சியடைந்த தேனிக்காரர் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துவிட்டார்.
என்னதான் இலைக்கட்சியும், மலராத தேசிய கட்சியும் ஒன்று சேர்ந்தாலும் மம்மியால் முதல்வராக்கப்பட்டவர் தேனிக்காரர் என்ற இமேஜ் தென் மாவட்டங்களிலும், அவரது சமுதாயத்து மத்தியிலும் ஒலித்து வருகிறதாம்.. இதனால் தனித்து விடப்பட்டாலும் தனது பலத்தை நிரூபிக்கவே தேனிக்காரர் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தாராம்.. தேனிக்காரர் கூட்டணியில் இருந்து விலகிவிட்ட நிலையில் குக்கர்காரரின் நிலையும் கேள்விக்குறியாகி இருக்காம்..
என்னதான் அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாகக் கூறிக் கொண்டிருந்தாலும் அவருக்கும் எக்ஸிட் கொடுத்து விட்டதாகவே அல்வா மற்றும் முத்து மாவட்ட இலைக்கட்சியினர் பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஒரே தொகுதியை குறி வைத்து நான்கு மாமன்ற கவுன்சிலர்கள் காய் நகர்த்துவது எங்கவாம்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் இப்போதே மலராத கட்சியும் இலைக்கட்சியும் சீட்டுக்கு அடிபோட தொடங்கிவிட்டாங்களாம்.. கடைசி எல்லை தொகுதியில் இலைகட்சி சார்பில் தற்போதைய எம்எல்ஏவான சுந்தரமானவருக்கே சீட்டாம்..
பக்கத்து தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் மலராத கட்சி எம்எல்ஏ அலுவலகத்தை கூட திறந்து மனு வாங்காதது உள்ளிட்ட சில காரணங்களால் அவருக்கு சீட் வழங்கினால் வெற்றி பெறுவது கடினம். எனவே பெரும்பான்மை சமூகத்தில் வேறு புதுமுகத்தை நிறுத்த வேண்டும் என்று மலராத கட்சி மத்தியில் கோரிக்கை வலுக்குதாம்.. இதற்காக எம்பி தொகுதிக்கு சீட் கேட்ட மாமன்ற உறுப்பினர், இப்போது தனக்கு தான் சீட் என சொல்றாராம்..
இந்நிலையில், மாநகராட்சி மேயராக தனது மகளை உருவாக்க முயன்று கணிசமாக செலவு செய்தும் அதனை நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கும் மாஜி எம்எல்ஏவான நாஞ்சிலானவர், தற்போது தனது மகளை எம்எல்ஏவாக்க கடும் பிரயத்தனம் செய்து வர்றாராம்.. இதற்காக இலை கட்சி மேலிடத்துடன் நேரடியாக நெருக்கம் காட்ட முயன்று வருவதுடன், தற்போது அவரு மகளான மாமன்ற உறுப்பினர் காலை முதல் இரவு வரை கட்சி பணிகளில் தீவிரம் காட்டுறாராம்.. அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் தாராள நிதி அளித்து வருகிறாராம்..
கடந்த கவுன்சிலர் தேர்தலின் போது, கடும் போட்டியை ஏற்படுத்திய தனது உடன்பிறந்த சகோதரரின் மனைவியை தற்போது அவருக்கு ஆதரவாக ஆக்கிக் கொண்டாராம்.. இந்த தொகுதியை மலராத கட்சியிடம் இருந்து எப்படியாவது பறித்துவிட முயற்சிகள் செய்றாராம்.. இதுபோல் மலராத கட்சியின் மற்ெறாரு மாமன்ற உறுப்பினரும், மண்டல் தலைவருமான முத்தானவர், முன்னாள் நகர்மன்ற தலைவியும் காய் நகர்த்தி வருகின்றனராம்.. நான்கு மாமன்ற உறுப்பினர்கள் ஒரே தொகுதியை குறிவைத்து காய் நகர்த்திக்கிட்டு இருக்காங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.