புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் நடந்த மோசடிகள் குறித்து செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி பேட்டி அளித்த போது, கர்நாடகாவில் சகுண் ராணி என்ற பெண்ணின் பெயர் வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் இடம் பெற்றிருந்ததாகவும் அவர் 2 முறை வாக்களித்ததாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‘எங்களின் விசாரணையில் சகுண் ராணி ஒருமுறை மட்டுமே வாக்களித்ததாக தெரியவந்துள்ளது. நீங்கள் (ராகுல் காந்தி) காட்டிய விளக்கக் காட்சியில் சகுண் ராணி 2 முறை வாக்களித்ததாக காட்டப்பட்ட டிக் அடையாளம் தேர்தல் அதிகாரியால் வழங்கப்படவில்லை.
எனவே சகுண் ராணி அல்லது வேறு யாராவது 2 முறை வாக்களித்துள்ளதாக நீங்கள் எந்த ஆவணத்தை வைத்து முடிவுக்கு வந்தீர்களோ அந்த ஆவணத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதன் மூலம் விரிவான விசாரணை மேற்கொள்ள முடியும்’ என கூறி உள்ளார்.
இதைத் தொடர்ந்து கர்நாடகா, அரியானா, மகாராஷ்டிராவில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும், இல்லாவிட்டால் அபத்தமான குற்றச்சாட்டுகளை கூறியதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் மீண்டும் ஒருமுறை ராகுல் காந்தியை வலியுறுத்தி உள்ளது.