Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

‘மார்பில் சுடப்படுவார்’ என ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: ஆர்எஸ்எஸ் பிரமுகர் மீது நடவடிக்கை கோரி அமித்ஷாவுக்கு காங். கடிதம்

புதுடெல்லி: ‘ராகுல் காந்தி மார்பில் சுடப்படுவார்’ என கொலை மிரட்டல் விடுத்த ஏபிவிபி முன்னாள் மாநிலத் தலைவர் மகாதேவ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி வாக்கு திருட்டு தொடர்பாக நாடு முழுவதும் பாஜவுக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், மலையாள டிவி சேனல் விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜ செய்தித் தொடர்பாளரும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பின் கேரள மாநில முன்னாள் தலைவருமான மகாதேவ், ‘‘ராகுல் காந்தி மார்பில் சுடப்படுவார்’’ என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‘ராகுல் காந்தி மார்பில் சுடப்படுவார்’ என்று மகாதேவ் வெளிப்படையாக கூறியது வன்முறையைத் தூண்டும் வெட்கக்கேடான செயல். இது வாய் தவறியோ அல்லது கவனக்குறைவாகவோ பேசிய வார்த்தைகள் அல்ல. இது எதிர்க்கட்சி தலைவருக்கும் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவருக்கும் எதிரான இரக்கமற்ற, திட்டமிட்ட மற்றும் பயமுறுத்தும் கொலை மிரட்டல்.

ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுபோன்ற நச்சு வார்த்தைகளை உச்சரிப்பது ராகுல் காந்தியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அரசியலமைப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுக்க வேண்டிய அடிப்படை பாதுகாப்பு உத்தரவாதங்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இதுவரையிலும் மகாதேவ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ராகுல் காந்திக்கு எதிரான கொலை மிரட்டல் என்பது தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக உணர்வின் மீதான தாக்குதல். எனவே, நீங்கள் விரைவாகவும், தீர்க்கமாகவும், பகிரங்கமாகவும் செயல்படத் தவறினால், அந்த தாக்குதலுக்கு உடந்தையாக இருப்பதாக கருதப்படும் உங்கள் கட்சியும் அரசும் எதற்காக நிற்கிறது என்பதை தெளிவுபடுத்துவது இப்போது உங்கள்

பொறுப்பு.

நீதி விரைவாகவும், வெளிப்படையாகவும், கடுமையாகவும் இருக்க, மாநில காவல்துறை மூலம் உடனடியாகவும், முன்மாதிரியான சட்ட நடவடிக்கையையும் நாடு கேட்கிறது. இவ்வாறு வேணுகோபால் கூறி உள்ளார். இதற்கிடையே பாஜ செய்தித் தொடர்பாளர் மகாதேவ் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர் மீது திருச்சூர் போலீசில் காங்கிரசார் புகார் செய்தனர். அதனை ஏற்று போலீசார் விசாரணை துவங்கி உள்ளனர்.

எந்த பதிலும் வரவில்லை;

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக கேரள காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் நான் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினேன். இது ஒரு பெரிய சதியின் ஒரு பகுதி என்று நாங்கள் நினைக்கிறோம். உள்துறை அமைச்சரிடமிருந்து எனக்கு இன்னும் எந்த பதிலும் கிடைக்கவில்லை’’ என்றார்.