திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் பிரின்டு மகாதேவ். எர்ணாகுளம் பகுதி பாஜ தலைவராக உள்ளார். திருச்சூர் அருகே உள்ள பேராமங்கலம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் பணி புரிந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மலையாள தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பிரின்டு மகாதேவ் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.
இது குறித்து திருச்சூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீகுமார் பேராமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பிரின்டு மகாதேவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராகுல் காந்திக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து சட்டசபையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று நேற்று கேரள சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இது ஒரு சாதாரண விஷயம் தான் என்றும், சபையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சபாநாயகர் ஷம்சீர் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். ஆனால் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜ தலைவரை கைது செய்யக்கோரி மாநிலம் முழுவதும் நேற்று காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.