ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு; முக்கிய சாட்சி ஆஜராகாததால் ஒத்திவைப்பு: 26ம் தேதி மீண்டும் விசாரணை
சுல்தான்பூர்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முக்கிய சாட்சி ஆஜராகாததால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, அப்போதைய பா.ஜ.க தேசியத் தலைவரும், தற்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, உத்தரப்பிரதேச மாநிலம், சுல்தான்பூரைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் விஜய் மிஸ்ரா, கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் அங்குள்ள எம்.பி.-எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்ததைத் தொடர்ந்து, ராகுல் காந்தி கடந்த பிப்ரவரி மாதம் நேரில் சரணடைந்து ஜாமீன் பெற்றார். பின்னர், கடந்த ஜூலை மாதம் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, புகார்தாரர் தரப்பு சாட்சிகளை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று (நவ. 17) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் முக்கிய சாட்சியான ராம் சந்திர துபே என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் ஆஜராக முடியாததற்கான காரணத்தைக் குறிப்பிட்டு, விசாரணைக்கு அவகாசம் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.


