ராகுல் பாதுகாப்பு வாகனங்கள் தடுத்து நிறுத்தம் பாஜ கும்பலின் செயல் ஜனநாயக மாண்பை சிதைப்பதாக உள்ளது: செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது சொந்த நாடாளுமன்ற தொகுதியான ரேபரேலிக்கு செல்லும் வழியில் பாஜ குண்டர்கள் திட்டமிட்டு அவரது பாதுகாப்பு வாகனங்களை தடுத்து நிறுத்தியிருப்பது, அரசியல் அராஜகமும் பாசிசக் கொடூரமும் ஆகும். இது நாட்டின் ஜனநாயக மாண்பை சிதைக்கும் செயல் என்பதை வெளிப்படுத்துகிறது. மக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதையெல்லாம் மறக்க மாட்டார்கள்.
தமிழக காங்கிரஸ் சார்பில் நான் இந்தச் செயலை வன்மையாக் கண்டிப்பது மட்டுமல்ல, மக்களிடம் நேரடியாகக் கூறுகிறேன், இது எச்சரிக்கை மணி அல்ல, இது போராட்ட மணி. ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு கிராமமும் பாஜவின் பாசிசத்துக்கு எதிராக புரட்சியின் மேடையாக மாறும். மக்களின் எழுச்சியால் பாஜவின் அடக்குமுறை சிதறி நொறுங்கி, ஜனநாயகம் மீண்டும் உயிர்த்தெழும். மோடி, ஆர்எஸ்எஸ், யோகி ஆதித்தநாத், நீங்கள் ஜனநாயகத்தை அடக்க முயற்சி செய்தாலும், மக்களின் தீர்ப்பு உங்களை வீழ்த்தும். இந்திய ஜனநாயகம் எரியும் நெருப்பாக எழுந்து, உங்களின் பாசிசக் கொடூரங்களை முற்றாக அழித்துவிடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.