Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுப்பதா?: பாஜக செய்தித் தொடர்பாளருக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!

சென்னை: பாஜக செய்தித் தொடர்பாளர் பிண்டூ மகாதேவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு தொலைக்காட்சி நேரலையில் வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் பிண்டூ மகாதேவின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தகைய கொலை மிரட்டல் என்பது ஒரு சாதாரண வாக்குவாதமோ அல்லது உணர்ச்சி மிகை பேச்சாகவோ எடுத்துக் கொள்ளக்கூடாது. இது திட்டமிட்ட, வெளிப்படையான கொலை மிரட்டல் ஆகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியத்துவமிக்க எதிர்க்கட்சி தலைவர் மீது ஆளும் அரசின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி ஒருவர் இப்படிப்பட்ட கருத்தை வெளியிடுவது, இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக மாண்புகள் மீது நடத்தப்படும் நேரடி தாக்குதலாகும்.

அரசியல் கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ள பாஜகவினர் வன்முறை மற்றும் அச்சுறுத்தல் வழியே சமாளிக்க விரும்புகிறார்களா? எதிர்க்கட்சித் தலைவரின் உயிருக்கு பாதுகாப்பை வழங்க வேண்டிய உள்துறை அமைச்சகம் இதற்கு என்ன விளக்கம் கூறப்போகிறது?

கொலை மிரட்டல் விடுத்த பிண்டூ மகாதேவுக்கு எதிராக உடனடி குற்றவியல் நடவடிக்கை மாநில காவல் துறையால் மேற்கொள்ளப்பட வேண்டும். இவரின் கொலை மிரட்டல் பேச்சுக்கு பாஜக தலைமையில் உள்ளவர்கள், நாட்டு பொதுமக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கவேண்டும். எதிர்க்கட்சித் தலைவரிடம் இச்செயலுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இச்சம்பவம் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் தன்னிச்சையாக முன்வந்து விளக்கம் அளிக்க வேண்டும்.

அச்சுறுத்தல், அவதூறு மற்றும் அரசியல் அடக்குமுறையால் எதிர்க்கட்சிகளை மிரட்டும் அரசியல் கலாச்சாரத்தை இந்திய ஜனநாயகம் ஒருபோதும் ஏற்காது. திரு. ராகுல் காந்தி அவர்களைப் போன்ற தலைவர்கள் மீது விடுக்கப்படும் ஒவ்வொரு அச்சுறுத்தலும், அவர் ஒருவரை மட்டுமே அல்ல – மக்கள் உரிமைகள், அரசியலமைப்பு, ஜனநாயக மாண்புகள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவே கருதப்படும்.

எந்த அளவு மிரட்டப்பட்டாலும், காங்கிரஸ் கட்சியும் இந்திய குடிமக்களும் சட்டப்பூர்வ ஜனநாயகப் போராட்டத்தில் இருந்து ஒரு அங்குலமும் பின்வாங்க மாட்டார்கள் என்பதை ஒன்றிய பாசிச பாஜக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.