புதுடெல்லி: உபியில் நடந்த அரசு கூட்டத்தில் ராகுல்காந்தி மற்றும் பா.ஜ அமைச்சர் இடையே நடந்த வாக்குவாதம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ரேபரேலி தொகுதி எம்பியான ராகுல்காந்தி தலைவராக உள்ளார். ஊரக வளர்ச்சித் துறையின் வழிகாட்டுதல்களின்படி, 43 திட்டங்களை செயல்படுத்துதல், மேற்பார்வையிடுதல் ஆகியவை அவரது பொறுப்பாகும்.
இந்த கூட்டத்தில் இணைத் தலைவர் கிஷோரி லால் சர்மா, உத்தரப்பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் மற்றும் எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங், கூட்டத்தின் தலைவரான ராகுலின் அனுமதியை பெறாமல் நேரடியாக அதிகாரிகளிடம் கேள்விகளை கேட்கத் தொடங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த ராகுல்காந்தி, குறுக்கிட்டு, ‘இந்த கூட்டத்திற்கு நான் தலைமை தாங்குகிறேன். உறுப்பினர்கள் பேசுவதற்கு முன்பாக தலைவரின் அனுமதியை கேட்க வேண்டும். பின்னர் பேசுவதற்கு உங்களுக்கு நான் வாய்ப்பு தருவேன்’ என்றார். இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங், ‘மக்களவையில் சபாநாயகருக்கு நீங்கள் கீழ்படிகிறீர்களா?. இப்போது நான் ஏன் உங்களுக்கு கீழ்படிய வேண்டும்?’ என்று கேட்டார். இந்த வாக்குவாத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் ஒரு நீண்ட அறிக்கையை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அதில் தொகுதி தலைவரான தனது மகனுடன் ராகுல்காந்தி கைகுலுக்கும் புகைப்படம் வைரலானது குறித்து பதிலளித்துள்ளார். காங்கிரஸ் ஆதரவாளர்கள் டிரோல் செய்வதற்காகவே இந்த படத்தை பரப்பியுள்ளனர். என் மகன் கைகுலுக்கி இருக்கக்கூடாது. ராகுல்காந்தியின் கால்களை தொட்டிருக்க வேண்டும். ஏனெனில் அவருக்கு என் வயது. ராகுலை நானும் எழுந்து நின்று வரவேற்றேன். ஆனால் அவர் என்னுடன் கைகுலுக்கவில்லை. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். நமது சொந்த வழிகாட்டுதலில் முன்னேறுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.