Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

அரசியல் சாசன தின விழாவில் தமிழில் உரையாற்றிய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்: நாடாளுமன்றத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற அரசியல் சாசன தின விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தனது உரையைத் தாய்மொழியான தமிழில் தொடங்கி அனைவரையும் கவர்ந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் கடந்த 1949ம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் 75வது அரசியல் சாசன தின விழா டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள சம்பிதான் சதனில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் மலையாளம், மராத்தி, தெலுங்கு, ஒடியா உள்ளிட்ட 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அரசியல் சாசனப் புத்தகங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் உரையாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தனது பேச்சைத் தாய்மொழியான தமிழில் தொடங்கிப் பேசியது அவையில் இருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் பேசுகையில், ‘நமது தேசத்தின் ஆன்மாவாக அரசியல் சாசனம் திகழ்கிறது. டாக்டர் அம்பேத்கர், ராஜேந்திர பிரசாத் போன்ற மாபெரும் தலைவர்கள் ஒவ்வொரு பக்கத்திலும் நாட்டின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் வகையில் இதனை உருவாக்கியுள்ளனர்.

இது கோடிக்கணக்கான மக்களின் கனவு மற்றும் தியாகத்தின் அடையாளம்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ‘புனிதமான இந்த இடத்தில் நடந்த விவாதங்களின் பயனாகவே நமக்குச் சிறந்த அரசியல் சாசனம் கிடைத்தது; இது சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான பாதையை வகுத்துள்ளது’ என்று புகழாரம் சூட்டினார்.