முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு: லாலு குடும்பத்தினருக்கு புதிய நெருக்கடி
பாட்னா: பீகாரில் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவியின் அரசு பங்களாவை காலி செய்யுமாறு மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ரப்ரி தேவி ஆகியோர் கடந்த 20 ஆண்டுகளாக பாட்னாவில் உள்ள 10, சர்க்குலர் சாலை இல்லத்தில் வசித்து வந்தனர். முன்னாள் முதல்வர்களுக்கு ஆயுட்காலம் முழுவதும் அரசு பங்களா ஒதுக்கீடு செய்யும் முறையை கடந்த 2019ம் ஆண்டு பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி புதிய ஆட்சியை அமைத்துள்ள சூழலில், அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுக்கான குடியிருப்பு ஒதுக்கீடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில், மாநில கட்டிட கட்டுமானத் துறை நேற்று ரப்ரி தேவிக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘தற்போது வசித்து வரும் பங்களாவை உடனடியாக காலி செய்துவிட்டு, சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 39, ஹார்டிங் சாலை இல்லத்திற்கு மாற வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு லாலு குடும்பத்திற்குத் தரப்படும் இந்த நெருக்கடி அரசியல் பழிவாங்கும் செயல் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அக்கட்சித் தரப்பில், ‘இடமாற்ற உத்தரவு கையில் கிடைத்ததும், இதுகுறித்து விரிவாகப் பேசப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


