வெறிநாய்கள் கடிப்பதால் பரவும் ரேபிஸ் நோய் பாதிப்புகளால் ஆண்டுக்கு 60 ஆயிரம் உயிரிழப்பு: செல்ல பிராணிகளிடம் கவனம் அவசியம்
உலக ரேபிஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28ம் தேதி (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. இதை வெறிநாய்க்கடி தினம் என்றும் மருத்துவ ஆர்வலர்கள் அழைக்கின்றனர். ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் மனிதர்களை நேரடியாக கடிப்பதாலோ அல்லது விலங்குகளால் கடிக்கப்பட்டு பிற விலங்குகள் மூலமாகவோ ரேபிஸ் நோய் தாக்குகிறது. இந்த நோய்க்கு தடுப்பு மருந்தை முதன் முதலில் 1885ம் ஆண்டு லூயிஸ் பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார். அதற்கு முன்பு, ரேபிஸ் நோயால் உயிரிழப்புகள் அதிகளவில் நிகழ்ந்தது. இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, லூயிஸ் பாஸ்டர் மறைந்த நாளான செப்டம்பர் 28ம்தேதி (இன்று) உலக ரேபிஸ் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோயால், ஒவ்ெவாரு ஆண்டும் சராசரியாக 60 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். சராசரியாக 10 நிமிடத்திற்கு ஒருவர் இறக்கிறார்.
ஒவ்வொரு 10 மரணங்களிலும் 4 மரணங்கள் குழந்தைகளாக உள்ளனர். உலகில் 97 சதவீதம் ரேபிஸ் நோய், நாய்கள் மூலம் தான் பரவுகிறது. இதில் 95 சதவீத மரணம் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் ஏற்படுகிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே ரேபிஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு நாளையொட்டி விலங்கியல் மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: ரேபிஸ் என்பது மிகப்பழமையான ஆபத்தான ஒரு உயிரியல் நோய் என்று சொல்வதே பொருத்தமானது. நாய்கள், குரங்குகள் மற்றும் பூனைகள் கடிப்பதன் மூலம் இந்த நோய் மனிதர்களுக்கு பரவுகிறது. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாய் கடிப்பதால் இந்த நோய், மனிதர்களை பாதிக்கிறது. ரேபிஸ் வைரசை சுமக்கும் விலங்குகள் வெறித்தனமான விலங்குகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில் பெரும்பாலான மக்கள் ரேபிஸ் பாதிப்பை வெறிநாய்க்கடி என்று குறிப்பிடுகின்றனர். நாய் கடித்த சில நாட்களில் இருந்து ஒரு வருடத்திற்குள் இதன் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். முதலில் கடித்த பகுதியை சுற்றிலும் ஒரு கூச்ச உணர்வு ஏற்படும். முட்கள் அல்லது அரிப்பும் இருக்கும். இதேபோல் காய்ச்சல், தலைவலி, தசைவலி, பசியின்மை, குமட்டல், சோர்வு போன்ற பாதிப்புகள் உருவாகும். இதனை தொடர்ந்து நரம்பியல் சார்ந்த பாதிப்புகள் உருவாகும். இதன்பிறகு குழப்பம், விநோதமான எண்ணங்கள், பிரமைகள், அசாதாரண தோரணைகள் உருவாகிறது. இதற்கு முறையான சிகிச்சை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போகும் நிலையில், அது மனிதர்களின் உயிருக்ேக உலை வைத்து விடுகிறது. ரேபிஸ் என்பது ஒரு தொற்றல்ல. அது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது.
இது பெரும்பாலும் ரேபிஸ் வைரஸ் பாதித்த விலங்குகள் கடிப்பதால் மனிதர்களுக்கு பரவுகிறது. விலங்குகளின் உமிழ்நீரில் இந்த வைரஸ் உள்ளது. இந்த வைரசானது உடைந்த தோல் அல்லது கண்கள், மூக்கு, வாய் வழியாக உடலுக்குள் நுழைகிறது. பின்னர் நரம்புகள் வழியாக மூளைக்கு செல்கிறது. அங்கு வைரஸ் பெருகி வீக்கத்தையும், சேதத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே நாய் கடி பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக, கடிபட்ட இடத்தை நன்றாக கழுவி விட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். இதற்காக தடுப்பு மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நாய்கள் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் மூலமே ரேபிஸ் நோய் அதிகளவில் தாக்குகிறது. எனவே, வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளிடம் கவனமாகவும், தொடர் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். இதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக, அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை அளிக்க வேண்டும்.இவ்வாறு விலங்கியல் மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
இதர விலங்குகள் மூலமும் பரவுகிறது
‘‘மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் பரவுவதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது நாய்கள். இதற்கடுத்து ரேபிஸ் பரப்புவதில் முக்கிய இடத்தில் இருப்பது வவ்வால்கள். வவ்வால் கடித்தால் அது சிறிதாகவும், கவனிப்பதற்கு கடினமாகவும் இருக்கும். எனவே மக்கள் ரேபிஸ் நோயால் பாதித்தாலும் உடனடியாக அதை அறிவதில் பெரும் சிரமம் உள்ளது. இதேபோல் நரிகள், ஓநாய்கள், பூனைகள் மூலமாகவும் ரேபிஸ் பாதிப்புகள் உருவாகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் நாய்களை போல், மற்ற உயிரினங்களிடம் மனிதர்கள் ஒட்டி உறவாடுவது இல்லை. இதன் காரணமாகவே நாய்கள் கடிப்பதன் மூலம் 98 சதவீதம் ரேபிஸ் பரவுகிறது,’’ என்பதும் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்.
இந்தியாவில் 36% பாதிப்பு
‘‘உலகளவில் ரேபிஸ் நோயின் தாக்கம் என்பது இந்தியாவில் 36 சதவீதமாக உள்ளது. ஆண்டுதோறும் ரேபிஸ் பாதிப்புகளால் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் இறப்புகள் வரை நிகழ்கிறது. இதில் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 30 சதவீதம் பாதிக்கின்றனர். ரேபிஸ் நோய்களில் 97 சதவீதம் நாய்களால் நிகழ்கிறது. பூனைகளால் 2 சதவீதமும், குள்ளநரிகளால் 1 சதவீதமும் ரேபிஸ் பாதிப்புகள் உருவாகிறது. நாய்களை பொறுத்தவரை ரேபிஸ் பாதிப்பு இருந்தால் அவற்றின் சீற்றம் அதிகமாக இருக்கும். பொருட்களை விழுங்குவதில் சிக்கல் இருக்கும். அதேபோல் நீண்டநேரம் குலைத்துக் கொண்டு இருக்கும்,’’ என்று விலங்கியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
