*பொதுமக்கள் ஒத்துழைக்க அறிவுறுத்தல்
திருவாரூர் : திருவாரூர் நகராட்சி பகுதியில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியினை ஆய்வு செய்த சேர்மன் புவனப்பிரியா செந்தில் பொதுமக்கள் ஒத்துழைக்க அறிவுறுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் கலெக்டர் மோகனசந்திரன் அறிவுரையின்படியும், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மகேஷ் வழிகாட்டுதலின்படியும், விலங்குகள் நலஅமைப்பு தன்னார்வலர்கள் சிந்துஜா மற்றும் சத்யா முன்னிலையில் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மூலம் பிடித்து, பிடிக்கப்பட்ட இடத்திலேயே கால்நடை மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் மூலம் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி அதேபகுதியிலேயே விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த தடுப்பூசி செலுத்தும் பணியானது கால்நடை துறை துணை இயக்குனர் தமிழரசு, உதவி இயக்குனர் கண்ணன் மற்றும் மருத்துவர் ரவிசந்திரன் மற்றும் கால்நடை துறை ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள் மூலம் கடந்த 12ந் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி, நேற்று நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு வ.உ.சி தெருவில் நடைபெற்ற ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியினை நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், திருவாரூர் நகராட்சி பகுதியில் வெறிநாய்க்கடி ஆபத்தினை முற்றிலுமாக தவிர்ப்பதற்கு இந்த ரேபீஸ் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் என்பதுடன் இனப்பெருக்கத்தினையும் கட்டுபடுத்த கருத்தடை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடமாடும் முகாம் மூலம் திருவாரூர் நகராட்சி பகுதியில் சுற்றிதிரியும் ஆயிரத்து 838 நாய்களை பிடித்தும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரையில் வார்டு எண் 3, 4, 5, 6, 8, 10, 11, 12, 14 மற்றும் 21 என மொத்தம் 10 வார்டுகளில் 337 சமூக நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள வார்டுகளிலும் இந்த பணியானது நடைபெறவுள்ள நிலையில் இதற்கு பொதுமக்கள் முழுஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார். ஆய்வின்போது, நகராட்சி கமிஷ்னர் சுரேந்திரஷா, சுகாதார அலுவலர் சுவாமிநாதன், ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.