காப்பகங்கள் அமைக்கப்பட்டால், நாய்க்கு உணவு தர செல்வதற்கு யாருக்கு தைரியம் உள்ளது? : அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
சென்னை : வெளிநாடுகளில் தெருநாய் பிரச்னை எவ்வாறு கையாளப்படுகிறது? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் அழைத்துச் செல்லப்பட்ட ராட்வீலர் நாய்கள் கடித்து சிறுவர் - சிறுமியர், வயதானோர் பாதிக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற ஆக்ரோஷமான நாய்களை தடை செய்வது அல்லது முறைப்படுத்துவதற்கு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது,
நீதிபதிகள் : ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களை எங்கு பராமரிக்கப் போகிறீர்கள்?
அரசுத் தரப்பு : ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களுக்காக தனி காப்பகங்கள் அமைக்க உள்ளோம்.
நீதிபதிகள் : காப்பகங்கள் அமைக்கப்பட்டால், நாய்க்கு உணவு தர செல்வதற்கு யாருக்கு தைரியம் உள்ளது?
நீதிபதிகள் : வெளிநாடுகளில் தெருநாய் பிரச்னை எவ்வாறு கையாளப்படுகிறது? அதில் என்ன தீர்வு காணப்பட்டுள்ளது?. என்ன தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை தெரிந்து அதை நம் நாட்டில் பின்பற்றலாம்.
அரசுத் தரப்பு : தெரு நாய்கள் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்டு, இந்த வழக்கையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.