Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புரட்டாசி ராபி பருவத்திற்கு வானிலை நகர்ந்து வரும் நிலையில் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் விதைகளை ஊன்றும் பணியில் விவசாயிகள்

*டிஏபி உரம் கிடைக்காததால் கவலை

கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் எக்டேர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலங்களில் ஆண்டுக்கு ஒருமுறை பெய்யக்கூடிய பருவமழையை நம்பியே உளுந்து, பாசி, கம்பு, பருத்தி, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகிறது.

கடந்த காலங்களில வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளின் சாணங்களை கோடை காலத்தில் நிலங்களில் தூவி உழவு செய்வார்கள். இதனால் புரட்டாசி மாதம் விதைப்பு சமயத்தில் விதைகள் முளைப்பதற்கு கால்நடை சாணங்கள் அடி உரங்களாக பயன்பட்டன.

தற்போது கால்நடைகள் வளர்ப்பு மிகவும் குறைந்து விட்டதால், செயற்கை உரங்களுக்கு விவசாயிகள் மாறிவிட்டனர். இதனால் விதைப்பதற்கு முன் டிஏபி அடி உரமும், பயிர் முளைத்த பின்னர் நன்கு வளர்வதற்கு யூரியா உரமும் பயிர்களுக்கு மிக முக்கியமானதாகும்.

இச்செயற்கை உரங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் வேப்ப எண்ணெய் மூலம் மெருகூட்டப்பட்டு 50 கிலோ பைகளாக கட்டப்படுகிறது. அதன்பின் கிராமப்புற தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு 50 கிலோ டிஏபி உரம் பை ரூ.1350க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் ஆகஸ்ட் மாத பிற்பகுதியில் கூட்டுறவு சங்கங்களுக்கு உர மூட்டைகள் அனுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக புரட்டாசி ராபி பருவத்திற்கு வானிலை நகர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் பயிர் காப்பீடு இழப்பீடு பணம் விடுவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் விதைகள், உரங்கள் கொள்முதல் செய்து விதைப்புக்கு தயாராயினர்.

ஆனால் இந்தாண்டு பயிர் காப்பீடும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. வெள்ள நிவாரணமும் வழங்கப்படவில்லை. இருப்பினும் காலம் காலமாக செய்து வரும் விவசாய தொழிலை விட்டால் வேறு தொழில் தெரியாது என்பதாலும், பாரம்பரிய விவசாயத்தை கைவிட மனமில்லாமலும் மீண்டும் கோடை உழவு செய்து விதைப்புக்கு தயாராகி விட்டனர்.

தோட்ட பாசன விவசாயிகள், கடந்த 20 நாட்களுக்கு முன்பு பருத்தி, மக்காச் சோளம் விதைகளை ஊன்றி விட்டனர். தற்போது 4 நாட்களாக மானாவாரி நிலங்களிலும் மக்காச் சோளம் விதைகள் ஊன்றி வருகின்றனர். ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பே வர வேண்டிய டிஏபி உரம் செப்டம்பர் 11ம் தேதி ஆகியும் கூட்டுறவு சங்கங்களுக்கு வரவில்லை.

அடி உரம் டிஏபி கிடைக்காததால் விவசாயிகள் முழுவீச்சில் விதைகள் ஊன்றும் பணியில் ஈடுபட முடியவில்லை. தொடர் மழை பெய்து விட்டால் நிலங்களில் அதிக ஈரப்பதம் ஏற்பட்டு விடும். இதனால் விதைகள் ஊன்றும் பணி தாமதம் ஏற்படும்.

எனவே அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் காலதாமதப்படுத்தாமல் அடி உரம் டிஏபி, மேலுரம் யூரியா உடனடியாக வழங்கி விவசாயிகளுக்கு உதவுமாறு கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.