பாட்னா: அரசியலில் இருந்து விலகுவதாக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் மகள் ரோகிணி ஆச்சாரியா எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். பீகார் சட்டசபை தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டது. இந்த தேர்தலில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதா தள கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் மகள் ரோகிணி ஆச்சாரியா எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். லாலு குடும்பத்துடனான உறவுகளை துண்டித்துக் கொள்கிறேன்.
சகோதரர் தேஜஸ்வியின் கூட்டாளிகள் சஞ்சய் யாதவ், ரமீஸ் ஆகியோரே எனது முடிவுக்கு காரணம். என் மீதே அனைத்து பழிகளும் போடப்படுகின்றன என்று ரோகிணி ஆச்சாரியா தெரிவித்துள்ளார். பீகார் தேர்தலில் படுதோல்வி அடைந்த மறுநாளே, லாலு மகளின் அறிவிப்பால் ஆர்ஜேடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சஞ்சய் யாதவ் ஆர்ஜேடியின் மாநிலங்களவை உறுப்பினர், உ.பியைச் சேர்ந்த ரமீஸ் தேஜஸ்வியின் நெருங்கிய நண்பர். லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தபோது, ரோகிணிதான் ஒரு சிறுநீரகத்தை தானமாக தந்தார். நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் சகோதரர் தேஜஸ்விக்கு ஆதரவாக ரோகிணி பரப்புரை செய்திருந்தார்


