சாத்தூர்: சாத்தூரில் நடந்த தவெக கூட்டத்தில், கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை என கூறிய மாவட்ட துணைச் செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிர்வாகிகள் சேர்களை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளராக சின்னப்பர், துணைச் செயலாளராக முத்துச்செல்வி உள்ளனர்.
முத்துச்செல்வியின் ஆலோசனையை கேட்டு மாவட்டச் செயலாளர் சின்னப்பர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக, நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சாத்தூரில் தவெக பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், சின்னப்பர் தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் தங்களுக்கு முறையான அழைப்பிதழ் வரவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மேடை அருகில் இருந்த துணைச்செயலாளர் முத்துச்செல்வி, இதுகுறித்து கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த நிர்வாகிகள் சிலர் சேர்களை தூக்கி வீசி எறிந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டம் சிறிது நேரம் தடைபட்டது.