சென்னை: காலாண்டுத் தேர்வுகள் மற்றும் முதல் பருவத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 10ல் தொடங்கி 26ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 27ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வரும் 6ம் தேதி திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் விடுமுறைக்கு பின்பு திறக்கப்பட உள்ள பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் விவரம் வருமாறு: பள்ளிகளில் வகுப்பறைகள் உள்பட வளாகம் முழுவதும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் விநியோகிக்கப்பட வேண்டும். மேலும், 2ம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாடநூல்களும் உடனே வழங்கப்பட வேண்டும். அதேபோல், பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி தலைமையாசிரியர்கள் துரிதமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.