சென்னை: தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் மற்றும் முதல் பருவத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 10ல் தொடங்கி 26ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 27ம் தேதி முதல் 9 நாள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை இன்றுடன் முடிகிறது. பள்ளிகள் மீண்டும் நாளை திறக்கப்பட உள்ளன.
இதையடுத்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிகளில் வகுப்பறைகள் உள்பட வளாகம் முழுவதும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் விநியோகிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 2ம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாடநூல்களும் உடனே வழங்கப்பட உள்ளது.
அதேபோல், பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி தலைமையாசிரியர்கள் துரிதமாக செயல்பட வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு ஏற்ப பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகள் தூய்மையாக இருக்கவும், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மேஜை, நாற்காலி, கரும்பலகை, குடிநீர் தொட்டி, கழிவறைகள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகங்களை தூய்மை செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். இதனை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கண்காணித்து தூய்மை பணிகள் மேற்கொண்ட விவரங்களை அனைத்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுக்கு வழங்கியுள்ளனர். இதையடுத்து, நாளை வழக்கம் போல 32 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதியுதவிப்பள்ளிகள் மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பினர்.