சென்னை: காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் மற்றும் முதல் பருவத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 10ல் தொடங்கி 26ம் தேதி வரை நடந்தது.
தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 27ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் விடுமுறைக்கு பின்பு திறக்கப்பட உள்ள பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
பள்ளிகளில் வகுப்பறைகள் உள்பட வளாகம் முழுவதும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் விநியோகிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 2ம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாடநூல்களும் உடனே வழங்கப்பட உள்ளது.
அதேபோல், பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி தலைமையாசிரியர்கள் துரிதமாக செயல்பட வேண்டும். மேலும், பருவமழை தொடங்க உள்ள நிலையில் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மாணவர்கள் பள்ளிக்கு மிதிவண்டிகளில் வரும்போது சகதிகளில் வழுக்கி விழக்கூடிய அபாயத்தை எடுத்துக் கூறி பாதுகாப்பாக பள்ளிக்கு வர அறிவுரை கூற வேண்டும்.
* மழைக்காலங்களில் மணவர்களும் அவர்களின் உடைமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் வகையில் மழைக் கோட்டுகளையோ அல்லது குடைகளையேணா பயன்படுத்த அறிவுரை வழங்க வேண்டும். அவ்வாறு பள்ளிக்கு குடைகளை கொண்டு வரும் போது மாணவர்கள் தங்களுக்குள் குடைகளைக் கொண்டு விளையாடக் கூடாது எனவும் அறிவுரை வழங்க வேண்டும்.
* மழை காரணமாக பள்ளிகளில் ஏதாவது வகுப்பறைகள் பாதிக்கப்பட்டு இருந்தால் அத்தகைய வகுப்பறைகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும். அந்த வகுப்பறைகள் அருகே மாணவர்கள் செல்லாதவாற கண்காணிக்க வேண்டும்.
* தொடர் மழை காரணமாக பள்ளிகளில் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச்சுவரில் இருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதபடி தடுப்புகள் ஏ ற்படுத்த வேண்டும். மாணவர்கள் அது போன்ற சுவர்கள் அருகில் செல்லாதபடி கண்காணிக்காவும் வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த் தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவு நீர்த் தொட்டிகள், நீர்த் தேக்க தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவை பாதுகாப்பான முறையில் மூடப்பட்டு உள்ளனவா என்பதை உறுதி செய்வதுடன் மாணவர்கள் அவற்றின் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
* பள்ளியில் உள்ள அனைத்து கட்டிடங்களின் மேற்கூறைகள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கூறையில் நீர்த் தேங்காதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேங்கும் பட்சத்தில் உடனடியணாக தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பள்ளி வளாகத்தில், கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடக்கும் இடங்களுக்கு அருகில் மாணவர்கள் செல்ல தடை விதிக்கவும், அப்பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களைச் சுற்றி பாதுகாப்பாக தடுப்புகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது அருகில் செல்வதோ கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.
* மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின்கசிவு மின்சுற்றுக் கோளாறுகள் ஏதாவது உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
* பழுதான மின் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதுடன் அவற்றை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் மின் அழுத்த மின்கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக் கூடிய மின்கம்பிகள் இருந்தால் அவற்றை அகற்ற மின் துறை மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
* மின் சுவிட்சுகள் சரியாக உள்ளனவா, மழைநீர் படாத வகையில் உள்ளதா என்பதையும் தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களை கொண்டு மின் சாதங்களை இயக்கக் கூடாது.
* மழைக்காலங்களில் தங்களை மழையில் இருந்து காத்துக் ெகாள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குவது கூடாது, இடி மின்னல் ஆபத்து குறித்தும் அறிவுறுத்த வேண்டும்.
* பருவகால மாற்றத்தால் ஏற்படும் நோய்கள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ மனைகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
* பள்ளி வளாகத்துக்குள்ளும், வெளியிலும் மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் பள்ளித் தலைமை ஆசிரியரால் மேற்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்களின் பள்ளிப் பார்வையின் போதும் மற்றும் ஆய்வின்போதும் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.