Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அகமதாபாத்தில் நாளை முதல் குவாலிபயர் போட்டி: முதல் இடத்தில் உள்ள கேகேஆரை வீழ்த்த சன்ரைசர்ஸ் ஆயத்தம்

சென்னை: ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டமான 70 வது போட்டியில் நேற்றிரவு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த தயாராக இருந்தன. ஆனால் கவுகாத்தியில் கடும் மழை பெய்ததால், டாஸ் கூட வீச முடியாத நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பிரித்து வழங்கப்பட்டது. இது சஞ்சு சாம்சனுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டியில் ஆடிய நிலையில் 16 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்தது. சன்ரைசர்ஸ் அணி 14 போட்டிகள் விளையாடி 17 புள்ளியுடன் இரண்டாம் இடத்தில் இருந்தது. இந்த நிலையில் நேற்று போட்டி நடந்த அதில் கொல்கத்தா அணியை ராஜஸ்தான் அணி வீழ்த்தி இருந்தால் 19 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றில் 2வது இடத்தை பிடித்திருக்கும். இதன் மூலம் குவாலிபயர் 1 போட்டியில் விளையாடி இருக்கலாம்.

ஆனால் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால், ராஜஸ்தான் அணிக்கு ஒரு புள்ளிகள் தான் வழங்கப்பட்டது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் 17 புள்ளிகள் பெற்று சமமாக இருந்த நிலையில், ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் அணி 2வது இடத்திற்கும், ராஜஸ்தான் 3வது இடத்திற்கும் சென்றது. இந்த நிலையில் வரும் நாளை (செவ்வாய்) நடைபெற உள்ள முதல் குவாலிபயர் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த தொடரில் 20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள கொல்கத்தா அணி இறுதி போட்டிக்கு முன்னேற வேண்டும் என மல்லுக்கட்டும். அதே நேரத்தில் அதிரடியில் மிரட்டி வரும் சன்ரைசர்ஸ் அணியும் இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றியே தீரவேண்டும் என்று வரிந்து கட்டுகிறது.

பலமிக்க கேகேஆர் அணியை தங்களது சொந்த மண்ணில் வீழ்த்த சன்ரைசர்ஸ் ஆயத்தமாக உள்ளது. இதற்காக பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணியினர் தயாராக உள்ளனர். இவர்களின் சவாலை ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கேகேஆர் சமாளிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம். இதையடுத்து மே 22 ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில், ஆர்சிபி அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. எலிமினேட்டர் போட்டியில் லீக் சுற்றில் முதல் 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்ற அணியும், முதல் 7 போட்டியில் 6 போட்டிகள் தோல்வி அடைந்த அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதன்பிறகு குவாலிபயர் 2 போட்டி மே 24ம்தேதி (வெள்ளி), மே 26ம்தேதி இறுதிப்போட்டி (ஞாயிறு) சென்னையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.