புழல்: புழல் அருகே நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைக்க வேண்டும், என்று கோரிக்கை எழுந்துள்ளது. மாதவரம் மண்டலம் 31வது வார்டு புழல் அடுத்த எம்ஜிஆர் நகர், மாதவரம் ரெட்டேரி நீர்பிடிப்பு பகுதி எனக் கருதி அங்கு வசித்து வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த ஆண்டு அகற்றப்பட்டு, 5 கிரவுண்ட் பரப்பளவு கொண்ட நிலத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் நீர்வளத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணா நகர், லிங்கம் தெரு, மதுரா மேட்டுப்பாளையம், ரெட்டி தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில், சிறுவர்கள் விளையாடி மகிழவும், பெரியோர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், உரிய இடம் இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், ரெட்டேரி எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள நீர்வளத்துறைக்கு சொந்தமான காலி இடத்தில் செங்குன்றம் நீர்வளத்துறை மற்றும் மாதவரம் மண்டலம் 31வது வார்டு மாநகராட்சி ஆகிய துறையினர் இணைந்து, பொதுமக்கள் நலன் கருதி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
