Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா மக்கள் உள்ளூர் பொருட்களை வாங்குவது இந்தியாவை தன்னிறைவு அடைய செய்யும்: நினைவு நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேச்சு

திருமலை: ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்க சிறப்பு விமானத்தில் புட்டபர்த்திக்கு வந்த பிரதமர் மோடியை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர் நாரா லோகேஷ் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், பிரதமர் மோடி ஸ்ரீசத்ய சாய் விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக பிரசாந்தி மந்திரை அடைந்தார். அங்கு நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் நீடித்த பாரம்பரியத்தை கவுரவிக்கும் வகையில், ரூ.100 மதிப்புள்ள நினைவு நாணயம் மற்றும் சத்ய சாய்பாபா குறித்த தொகுப்பை வெளியிட்டார். இதனையடுத்து பிரதமர் மோடி மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு ஆகியோர் ஸ்ரீசத்ய சாயின் நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டனர்.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய் என்று பாபா போதித்தார். அவருடன் சேர்ந்து, அவரது நிறுவனங்களும் அதே பாதையைப் பின்பற்றுகின்றன. பாபா நம்மிடையே உடல் ரீதியாக இல்லாவிட்டாலும், அவர் நிறுவிய நிறுவனங்கள் கிராமப்புற மேம்பாடு மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றன. விக்சித் பாரத் என்ற குறிக்கோளுடன் நாடு முன்னேறி வருகிறது. இதில் மக்களின் பங்களிப்பும் அவசியம். உள்ளூர் மக்களுக்கான குரல் என்ற மந்திரத்தை நான் ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். உள்ளூர் பொருளாதாரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். மக்கள் உள்ளூர் பொருட்களை வாங்குவது இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும். ஸ்ரீபகவான் சத்ய சாயின் உத்வேகத்தின் கீழ் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். ஒவ்வொரு நபரும் தங்கள் சிந்தனையில் இரக்கம், அமைதி மற்றும் கர்மாவின் கொள்கைகளுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.