புட்டபர்த்தி சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை..!!
ஆந்திரா: புட்டபர்த்தி சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி இன்று (நவ.,19) காலை புட்டபர்த்தி வந்தடைந்தார். பின்னர், காலை 10:30 மணியளவில் சாய்பாபாவின் மகா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அங்கு வேத பண்டிதர்கள் மந்திரங்களை முழங்க பிரதமர் வழிபட்டு, தியானத்தில் ஈடுபட்டார்.தொடர்ந்து, நூற்றாண்டு விழாவில்,கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பிரபல பாடகி சுதா ரகுநாதன் குழுவினரின் இசை நிகழ்ச்சி, நாட்டியக்கலைஞர்களின் நடனங்களை பிரதமர் மோடி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கண்டு களித்தனர். ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில், பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை, போதனைகளை கெளரவிக்கும் வகையில் நினைவு நாணயம் மற்றும் தபால் தலைகளின் தொகுப்பை பிரதமர் மோடி வெளியிடுகிறார். தற்போது மக்களிடையே உரையாற்றி வருகிறார். பின்னர், கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு கோவை கொடிசியா மைதானத்தில் மதியம் 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது. விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கோவை வரவுள்ளார்.அவரின் வருகை அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், நாட்டில் 9 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டத்தின் 21-வது தவணையாக ரூ.18,000 கோடிக்கும் அதிகமான தொகையை விடுவித்து உரையாற்ற உள்ளார்.


