கரூர்: கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக கரூர் டவுன் போலீசார் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் உட்பட பலர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஆனால் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர். ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் தலைமையிலான தனிப்படையினர், இந்த வழக்கில் தொடர்புடைய புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகிய இருவரையும் தேடி கேரள மாநிலம் மற்றும் கோவை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.
+
Advertisement