மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் முன்ஜாமீன் கேட்டு புஸ்ஸி ஆனந்த் மீண்டும் மனு செய்து உள்ளார். கரூரில் கடந்த 27ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியாகினர். இதற்கு 7 மணிநேரம் தாமதமாக விஜய் வந்ததும், நாமக்கல் மற்றும் கரூர் எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்ததும் தான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கரூர் போலீசார் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் தவெக மாவட்ட தலைவர் மதியழகன் உள்ளிட்டோர் மீது மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்த தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல்குமார் தரப்பில் முன்ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை கடந்த 3ம் தேதி விசாரித்த நீதிபதி எம்.ஜோதிராமன், அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று, விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால் முன்ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்தார். இந்நிலையில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனக்கு முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மீண்டும் மனு செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.