Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ரூ.2821 கோடியில் 28 ரயில்கள் கொள்முதல்; முதற்கட்டமாக 5 ரயில்கள் ரூ.300 கோடியில் வாங்க முடிவு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

சென்னை: ரூ.2,821 கோடியில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக 5 மெட்ரோ ரயில்கள் ரூ.300 கோடியில் வாங்க முடிவு செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் முதல் கட்டத்தில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்தப் பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே மெட்ரோ ரயில்களில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் முதல் 3.50 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். நெரிசல் மிகுந்த நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் நாளுக்கு நாள் மெட்ரோவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருகிறது. இதற்காக மெட்ரோ ரயில்களில், பயணியர் தேவைக்கு ஏற்ப, மெட்ரோ ரயில் சேவையின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், சில நேரங்களில் அதிகமாக பயணிகள் வந்து விடுகின்றனர். இதையடுத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் இரு வழித்தடங்களிலும் பயணிகளின் வசதிக்காக, மெட்ரோ ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6ஆக உயர்த்தவும், இதற்காக 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்யவும் மெட்ரோ நிர்வாகம் திட்டமிடப்பட்டது.

இதுதொடர்பாக ஆய்வு செய்து, அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதையடுத்து, 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்கள் வாங்க ஒப்புதல் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கருத்துரு அனுப்பியது. இந்த கருத்துருவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, மெட்ரோரயில் முதல்கட்டத்தின் கட்டமைப்பு முழுவதையும் இயக்குவதற்காகவும், 2028ம் ஆண்டின் உத்தேச பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் கூடுதலாக தேவைப்படும் ரயில் பெட்டிகளை கணக்கிட்டு, ரூ.2,821.90 கோடி மதிப்பில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், முதல்கட்டமாக, 6 பெட்டிகளை கொண்ட 5 மெட்ரோ ரயில்களை ரூ.300 கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில்களில், பயணியர் தேவைக்கு ஏற்ப, மெட்ரோ ரயில் சேவையின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள நான்கு பெட்டிகள் போதுமானதாக இல்லை. இதற்கிடையே, முதல் முறையாக ஆறு பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான பணிகளை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போதுள்ள, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும், போதிய அளவில் நடைமேடை வசதி இருப்பதால், விரிவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டியதில்லை.

ரூ.2,821 கோடி மதிப்பில் 6 பெட்டிகளைக் கொண்ட 28 மெட்ரோரயில்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 6 பெட்டிகளைக் கொண்ட 5 மெட்ரோ ரயில்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.300 கோடி கடன் வாங்கப்பட உள்ளது. இதற்கான ஆவணப் பணிகள் தொடங்கியுள்ளன. புதிய மெட்ரோ ரயில்கள் படிப்படியாக கொண்டுவரப்பட்டு, சேவையில் இணைக்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் இந்த மெட்ரோ ரயில்கள் அனைத்தும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.