Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

புரட்டாசி பவுர்ணமி.. கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: விழுப்புரம்- திருவண்ணாமலை சிறப்பு ரயில்!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்:

இந்நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பவுர்ணமி அக்.6ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 11.49 மணி முதல் மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9.53 மணி வரை கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிறப்பு ரயில் இயக்கம்:

பவுர்ணமியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அக்.6ம் தேதி திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவண்ணாமலை கோயில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக 8 பெட்டிகள் கொண்ட முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

அக்டோபர் 6ஆம் தேதி காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு மெமு ரயில் (வண்டி எண் 06130), திருக்கோயிலூர் வழியாக திருவண்ணாமலைக்கு காலை 11.45 மணியளவில் சென்றடையும். அதேபோல் மறு வழித்தடத்தில், திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்பட்டும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) திருக்கோயிலூர் வழியாக பிற்பகல் 2.15 மணியளவில் விழுப்புரம் வந்தடையும். இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.