வத்திராயிருப்பு: புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. பிரசித்திபெற்ற இக்கோயிலானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சித்தர்களின் சொர்க்க பூமி எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் பக்தர்கள் மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் தற்போது தினமும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இன்று புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதல் தாணிப்பாறை அடிவாரத்தில் பக்தர்கள் குவிந்தனர். இவர்களை வனத்துறையினர் பரிசோதனை செய்து கோயிலுக்கு செல்ல அனுமதித்தனர். இதையடுத்து பக்தர்கள் மலையேறி சென்று சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்தனர். காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மலைப்பகுதியில் இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும், மழை பெய்தால் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.