பஞ்சாபில் பலாத்கார வழக்கில் கைதானபோது போலீசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஆம்ஆத்மி எம்எல்ஏ தப்பியோட்டம்
கர்னால்: பஞ்சாப் மாநிலம் சனவுர் தொகுதியின் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் ஹர்மீத் சிங் பதான்மஜ்ரா. இவர் மீது ஜிராக்பூரை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் புகார் கொடுத்தார். எம்எல்ஏ விவாகரத்து பெற்றவர் என்று கூறி என்னுடன் உறவில் இருந்தார். பின்னர் 2021ம் ஆண்டு என்னை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து பாலியல் சுரண்டல், அச்சுறுத்தல்கள் மற்றும் ஆபாசமான தகவல்களை எனக்கு அனுப்பினார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் பேஸ்புக் நேரலையில் தோன்றிய அவர், பஞ்சாப் அரசை கடுமையாக விமர்சித்தார். ஆம் ஆத்மி தலைமை பஞ்சாபை சட்டவிரோதமாக ஆட்சி செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
இதனிடையே எம்எல்ஏ பதான்மஜ்ராவை கைது செய்வதற்காக போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை அரியானாவின் கர்னால் பகுதியில் ஹர்மீத் சிங் பதான்மஜ்ராவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, யாரும் எதிர்பாராத விதமாக சட்டமன்ற உறுப்பினர் பதான்மஜ்ராவின் ஆதரவாளர்கள் மற்றும் கிராம மக்கள் போலீசார் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். மேலும் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசார் மீது சரமாரியாகச் சுட்டனர். இதில் போலீசார் நிலைகுலைந்தநிலையில் அங்கிருந்து எம்எல்ஏ தப்பினார். அப்போது அவர்களைத் தடுக்க முயன்ற போலீஸ்காரர் ஒருவரின் மீது காரை ஏற்றிக் கொடூரமாகத் தாக்கிவிட்டு, இரண்டு சொகுசு வாகனங்களில் ஆதரவாளர்களுடன் எம்எல்ஏ தப்பிச் சென்றார்.
அவர்களை விரட்டிச் சென்ற போலீசார், ஒரு காரை மடக்கிப் பிடித்தனர். ஆனால், எம்எல்ஏ ஹர்மீத் பதான்மஜ்ரா மற்றொரு காரில் தப்பிச் சென்றுவிட்டார். எம்எல்ஏ கூட்டணி ஒருவர் மட்டும் போலீசிடம் சிக்கினார்.