சண்டிகர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்திற்கு சிறப்பு நிவாரண நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல லட்சம் ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி ரூ.1,600 கோடி வெள்ள நிவாரணமாக அறிவித்தார்.
ஆனால் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ரூ.20 ஆயிரம் கோடி வெள்ள நிவாரண சிறப்பு நிதி தொகுப்பாக வழங்க வேண்டுமென பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் தொடர்ந்து கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி சந்திக்க பலமுறை அனுமதி கேட்டும் எந்த பதிலும் தரப்படவில்லை. அதே சமயம் பஞ்சாப் ஆளுநரை மட்டும் பிரதமர் மோடி சந்தித்து பேசி உள்ளார். இதற்கிடையே, பஞ்சாப் சட்டப்பேரவையின் 2 நாள் சிறப்பு கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல இழப்பீடு நிதி அறிவிக்கப்பட்டது. கூட்டத்தொடரின் நிறைவு நாளான நேற்று வெள்ள நிவாரணத்திற்கு சிறப்பு நிவாரண நிதி தராமலும், கோரிக்கைக்கு பிரதமர் மோடி பதில் கூட தராமல் மாநில மக்களை அவமதித்ததற்காகவும் ஒன்றிய அரசை கண்டித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.