அம்பாலா: விவசாயிகள் போராட்டத்தின் 100வது நாளான நேற்று பஞ்சாப்- அரியானா எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எம். எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்த முயன்றனர். டெல்லி செல்ல முயன்ற விவசாயிகளை பஞ்சாப் -அரியானா எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதை தொடர்ந்து, ஷம்பு, கனோரி பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் 100வது நாளான நேற்று ஷம்பு, கனோரியில் நேற்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்தனர். ஷம்பு, கனோரி மற்றும் டப்வாலி போன்ற எல்லை பகுதிகளில் விவசாய தொழிலாளர் போராட்ட குழு தலைவர் சர்வண்சிங் பந்தர் நேற்று சென்றார். அங்கு விவசாயிகளை சந்தித்து அவர் பேசுகையில்,‘‘ டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு ஒன்றிய பாஜ அரசு அனுமதி மறுக்கிறது. இந்த போராட்டத்தை முறியடிக்க பஞ்சாப்- அரியானா எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அனுமதி மறுத்தால், தர்ணா நடத்தப்படும்’’ என்றார்.பஞ்சாப்பில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் பாஜ வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு கூட போக முடியாத நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.