Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

37 ஆண்டுகளுக்கு பிறகு பெரும் பாதிப்பு; வெள்ளத்தில் மிதக்கிறது பஞ்சாப்: 37 பேர் பலி; 23 மாவட்டங்கள் தத்தளிப்பு

அமிர்தசரஸ்: 37 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாப் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. 23 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 37 பேர் பலியாகி விட்டனர். இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து நடந்த மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழையால் சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி உள்பட அத்தனை ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் 1988 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு 37 பேர் பலியாகி விட்டனர்.

3.50 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 23 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குர்தாஸ்பூர், பதான்கோட், பாசில்கா, கபூர்தலா, டர்ன் தரன், பெரோஸ்பூர், ஹோஷியார்பூர் மற்றும் அமிர்தசரஸ் மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் செப்டம்பர் 7 ஆம் தேதி வரை மூட பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா மற்றும் பஞ்சாப் அமைச்சர்கள் அங்குள்ள டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பியாஸ் நதிக்கரையோரத்தில் உள்ள பாதிக்கப்படக்கூடிய இடங்களை ஆய்வு செய்தனர். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் இன்று பஞ்சாப் வெள்ள சேதங்களை பார்வையிட உள்ளனர்.

ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட உள்ளார். இந்த வெள்ளத்தால் பஞ்சாப் மாநிலத்தில் 1.48 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு மேல் பயிர்கள் நாசமாகியுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • ராஜஸ்தான் மாநிலத்திலும் கன மழை கொட்டி வருகிறது. இதனால் ரயில், சாலை போக்குவத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
  •  சட்டீஸ்கர் மாநிலத்தில் பால்ராம்பூரில் அணை உடைப்பு ஏற்பட்டதால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 4 பேர் பலியாகி விட்டனர்.
  •  அரியானா மாநிலம் குருஷேத்திராவில் கனமழையால் ஆற்று வெள்ளம் புகுந்ததில் வீடு இடிந்து 2 பேர் பலியானார்கள்.
  •  காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானியின் காங்க்ரி கிராமத்தில் தாய், மகள் பலியானார்கள்.

யமுனை வெள்ளத்தால் டெல்லி மிதக்கிறது

யமுனை ஆற்றில் 207 மீட்டர் உயரம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் டெல்லியில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மஜ்னு கா திலாவில் உள்ள கடைக்காரர்கள் முதல் மதன்பூர் காதர் மற்றும் பதர்பூர் பரை வெள்ளம் புகுந்துள்ளது. ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் வெள்ளத்தில் வாசுதேவ் படித்துறை மூழ்கி விட்டது.

நடிகர்கள் அதிர்ச்சி

பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு இந்தி நடிகர்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் தனது எக்ஸ் பதிவில்,’ இந்த பேரழிவு தரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாபில் உள்ளவர்களுக்கு என் இதயம் துடிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல் நடிகர் சோனு சூட், பாடகர் தில்ஜித் டோசன்ஜ் உள்ளிட்டோர் பஞ்சாப் மக்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கி உள்ளனர்.