* சிறப்புச்செய்தி
சென்னை கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்திற்கு வருபவர்கள் விரைவில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பதை போன்ற அற்புத அனுபவத்தை பெற உள்ளனர்.
சென்னை கோட்டூர்புரம் அறிவியல் மையத்தை புனரமைத்து புதுப்பொலிவுடன் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பீட்டில் பெரிய மேம்பாட்டு திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது. 1988ல் இந்த மையம் நிறுவப்பட்டது. இதற்கு ஒரு புதிய பொலிவைக் கொடுக்கும் முயற்சியில், தேசிய அறிவியல் அருங்காட்சியக கழகம், தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறைகள், விண்வெளி அறிவியல் மற்றும் கடல் உயிரியல் ஆகியவற்றில் மேம்பட்ட மெய்நிகர் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி (Virtual and Augmented Reality) கண்காட்சிகள் இடம்பெறும். மேலும், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அறிவியல் பூங்கா, ஒரு உயர் சக்தி வாய்ந்த வானியல் தொலைநோக்கி, ஆழ்கடல் மற்றும் விண்வெளி சூழல்களை உருவகப்படுத்தக்கூடிய டிஜிட்டல் திரையரங்குகள் ஆகியவையும் இடம்பெறும்.பெரியார் காட்சிக்கூடம், கடல் காட்சிக்கூடம், இதய அருங்காட்சியகம் மற்றும் ராமானுஜன் கணித காட்சிக்கூடம் போன்ற ஆகியவை புதுப்பிக்கப்படும்.
வளாகத்தில் புதிய கற்றல் மண்டலங்கள், கிரகங்கள் சார்ந்த பொழுதுபோக்கு பகுதி, பசுமை மண்டலங்கள், நடைபாதைகள், இருக்கை வசதிகள், அறிவியல் சார்ந்த பொது நிகழ்வுகளுக்கான வெளிப்புற ஆம்பிதியேட்டர் போன்றவை இந்த திட்டத்தின் கீழ் வருகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் நிர்வாக இயக்குநர் சண்முக சுந்தரம் கூறியதாவது: கணிதம், அறிவியல், விண்வெளி, 3டி அரங்கம் உள்ளிட்ட 11 வகையான அரங்குகள் உள்ளன. குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகள், அறிவியல் ஆர்வலர்கள் என நாள் ஒன்றுக்கு சராசரியாக 1500 பேர் இங்கு வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் 3 ஆயிரம் பேர் வரை வருகின்றனர். இதனால் அரங்குகளில் இட பற்றாக்குறை ஏற்படுகிறது. வான்வெளி குறித்த தொகுப்புகள் நாள் ஒன்றுக்கு 8 முறை திரையிடப்படுகிறது.
வருடத்திற்கு 3 நாட்கள் அரசு விடுமுறை நாளில் மட்டுமே இந்த மையம் மூடப்படுகிறது. தற்போது அரசின் உதவியுடன் இந்த மையம் கண்காட்சிகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சமீபத்திய விண்வெளி திட்டங்களான சந்திரயான், மங்கள்யான் மற்றும் வரவிருக்கும் ககன்யான் திட்டங்களையும் காட்சிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்ரோவில் உள்ள அதற்கான பிரதிநிதிகளிடமும் பேசியுள்ளோம். மாணவர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை நாங்கள் திட்டமிட்டுள்ளோம். கடல் காட்சியகமும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (என்ஐஓடி) உதவியுடன் மேம்படுத்தப்படும்.
“தற்போது, பவளப்பாறைகள் மற்றும் மீன்களின் படங்கள் உள்ளன. என்ஐஓடி உதவியுடன், மாணவர்கள் மீன்கள் மற்றும் பவளப்பாறைகளால் சூழப்பட்ட சுரங்கப்பாதையில் நடந்து செல்லும் வகையில் நீருக்கடியில் காட்சியை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதேபோல், மாணவர்களிடையே அணுசக்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, நடமாடும் அணுமின் நிலையத்தை வழங்குமாறு இந்திய அணுசக்தி கழகத்திடம் (என்பிசிஐஎல்) கேட்டுள்ளோம். புதிய திட்டங்களில், விஞ்ஞானிகளுக்கான பிரத்யேக காட்சியகத்தை உருவாக்கும் திட்டமும் உள்ளது. ஒரு AI அனுபவ மையம், டிரோன்கள் மற்றும் ரோபோக்கள் கண்காட்சிகளில் சேர்க்கப்படும். குழந்தைகளை ஈர்க்க ஒரு இசை நீரூற்று, ஏஐ தொழில் நுட்பத்துடன் பெரியார் கலையரங்கத்தில், மாணவர்கள் பெரியாருடன் உரையாடலாம். இந்த பணிகள் நிறைவடைய குறைந்தது 2 வருடங்கள் ஆகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
* என்னவெல்லாம் பார்க்கலாம்
தற்போது தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் கணிதம், அறிவியல், கண்ணாடி மாயை, பார்மால்டிஹைடு மூலம் பதப்படுத்தப்பட்ட உயிரினங்கள், 60க்கும் அதிகமான பதப்படுத்தப்பட்ட மனித இதயங்கள், போக்குவரத்து பரிமான வளர்ச்சி, இந்திய வெண்வெளி ஆய்வு இதுபோன்ற 11 வகையான கலை அரங்கங்கள் உள்ளன. 80களில் படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கட்டுப்பட்டு கருவிகள், கேமராக்கள், டிவி உள்ளிட்டவை அங்கு பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் சிரமில்லாமல் சுற்றி பார்ப்பதற்கு 25 லட்சம் செலவில் லிப்ட் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இந்தப்பணிகள் நிறைவடைந்துவிடும்.
* பள்ளிகளுக்கு நேரடியாக சென்று அறிவியல் சோதனைகளை நேரடியாக மாணவர்களுக்கு செய்துகாட்ட பேருந்து மூலம் நடமாடும் அறிவியல் கண்காட்சி மையமும் உள்ளது. தற்போது கூடுதலாக பேருந்து வாங்க தமிழ்நாடு அரசு 80 லட்சம் வழங்கியுள்ளது. ஜனவரி மாதம் பொங்கல் தினத்திற்குள் பேருந்து தயாராகி விடும். அரசுப்பள்ளிகளுக்கு இந்த பேருந்து இலவசம். தற்போதுவரை நேரடியாக டிக்கெட் பெறும் நடைமுறை இருந்துவரும் நிலையில், டிசம்பர் முதல் வாரத்திற்குள் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறும் வசதி மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.


