Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சியாகிறது: பேரவையில் மசோதா தாக்கல்

சென்னை: வரலாற்று தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோவில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் அரசுக்கு வந்தன. அவற்றை ஏற்று அந்த நகராட்சிகளையும், அவற்றின் அருகில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று கடந்த ஆண்டில் சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த வகை செய்யும் சட்ட மசோதாவை நேற்று சட்டசபையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்தார்.

அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது: மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டிய நகராட்சியில் மக்கள் தொகை 3 லட்சத்திற்கு குறையாமலும், அதன் ஆண்டு வருமானம் ரூ.30 கோடிக்கு குறையாததுமாய் இருக்க வேண்டும். ஆனால் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சியாக உயர்த்துவதற்கான, மக்கள் தொகை மற்றும் வருமானம் ஆகியவை போதுமான அளவில் இல்லை. என்றாலும், குறைவான மக்கள் தொகை, வருமானம் உள்ள பல மாவட்ட தலைமையிடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களாகவும், ஆன்மிக சுற்றுலாவினால் உறுதியான நகரமயமாதல் காரணமாக, தொடர்ச்சியான நிலையான வளர்ச்சி கொண்டதாகவும் உள்ளன.

அவற்றுக்கு உள்கட்டமைப்பு வசதியின் தேவை உள்ளதால், அவற்றை தரம் உயர்த்துவது அவசியமானது என்பது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி நகராட்சிகளை தரம் உயர்த்துவதற்கான மக்கள் தொகை மற்றும் வருவாய் அளவுகோல் தரம் உயர்த்துவதற்கான நேர்வில் இல்லை என்பதால், அதற்கான சட்டப் பிரிவுகளை திருத்த செய்வதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அந்த சட்டப் பிரிவுல் குறிப்பிடப்பட்டுள்ள 3 லட்சம் என்ற மக்கள் தொகை அளவை இரண்டு லட்சமாகவும், ஆண்டு வருமானம் ரூ.30 கோடி என்பதை ரூ.20 கோடியாகவும் மாற்ற வேண்டும் என்று அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா இன்று சட்டசபையில் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு அந்த 4 நகராட்சிகளும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.