*போலீசார் அறிவுரையை ஏற்று கலெக்டரிடம் மனு
தூத்துக்குடி : புதுக்கோட்டையில் போக்குவரத்து முடக்கத்திற்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை ஊரை சுற்றி கூட்டாம்புளி, மேலகூட்டுடன்காடு, நடுக்கூட்டுடன்காடு, கீழகூட்டுடன்காடு, சிறுப்பாடு, திருமலையாபுரம், சூசைபாண்டியாபுரம் உள்ளிட்ட சுமார் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் தினசரி புதுக்கோட்டைக்கு வந்து செல்கின்றனர்.
கடந்த காலங்களில் திருநெல்வேலி-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் புதுக்கோட்டை பழைய பாலம் வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வந்து சென்றன. ஊருக்கு வெளியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு பாயிண்ட் டு பாயிண்ட் என்கிற இடைநில்லா பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து சென்றன.
ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டி, பயன்பாட்டிற்கு வந்த பிறகு திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் எந்த பேருந்துகளும் புதுக்கோட்டை ஊருக்குள் வருவதில்லை. அதற்கான வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.
தூத்துக்குடியில் இருந்து நெல்லை, ஸ்ரீவைகுண்டம், சாயர்புரம் உள்ளிட்ட வழித்தடத்திற்கு செல்லும் பேருந்துகள் மட்டும் தற்போது புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்கின்றன.
ஆனால் திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், செக்காரக்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் எந்த பேருந்துகளும் புதுக்கோட்டை ஊருக்குள் வருவதில்லை.
அந்த பேருந்துகள் புதுக்கோட்டைக்கு வெளியிலேயே பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிடுகின்றன. இதனால் வயதான முதியோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், மாணவ,மாணவியர் என அனைவருமே ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு என்பது தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுக்கோட்டை மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து, கீழகூட்டுடன்காடு பேருந்து நிறுத்தம் மற்றும் புதுக்கோட்டை போஸ்ட் ஆபிஸ் சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் ஊராட்சி ஒன்றியம் அருகே அமைக்கப்பட்டிருப்பதுபோல் புதிய வழித்தடம் அமைக்க வேண்டும். இதன் மூலமே போக்குவரத்து சீராகும்.இந்நிலையில் அதிகளவில் விபத்துக்கள் நடைபெறுகிறது என்கிற காரணத்திற்காக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திறந்தவெளி பாதை அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்காலிகமாக புதுக்கோட்டை பாலம் அருகே நெடுஞ்சாலையை கடந்து சென்று வந்த கீழகூட்டுடன்காடு பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே காலம் தாழ்த்தாமல் திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் செக்காரக்குடி, பேரூரணி, கூட்டுடன்காடு உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் பேருந்துகள், புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்வதற்கு வசதியாகவும், கீழ கூட்டுடன்காடு உள்ளிட்ட அப்பகுதி மக்கள் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர வசதியாகவும் தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுக்கோட்டை மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து, கீழகூட்டுடன்காடு பேருந்து நிறுத்தம் மற்றும் போஸ்ட் ஆபிஸ் சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இருப்பதுபோல் புதிய வழித்தடம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கீழகூட்டுடன்காடு, அய்யனார்காலனி, அய்யனார் காலனி கீழ்பகுதி, ராஜீவ்நகர், ஐயப்பன்நகர், யூகோநகர் உள்ளிட்ட பகுதி மக்கள் ஒன்று திரண்டு தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த புதுக்கோட்டை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகவும், அனைவரும் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தங்கள் கோரிக்கையை மனுவாக அளித்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதனை ஏற்று மறியலை கைவிட்ட பொதுமக்கள், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளித்தனர். இதில் கீழகூட்டுடன்காடு, அய்யனார்காலனி, அய்யனார்காலனி கீழ்பகுதி, ராஜீவ்நகர், ஐயப்பன்நகர், யூகோநகர் பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ரவிதாகூர், ஒன்றிய செயலாளர் சங்கரன் மற்றும் வெயில்ராஜ், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.