*சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ள கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், குமாரகிரி ஊராட்சியில் உள்ள பெரியபிராட்டிகுளம் மற்றும் அதன் அருகிலும் முன்னெச்சரிக்கை பணிகள் நடந்துள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பணியில் குளத்தின் தண்ணீர் வெளியேறும் பகுதியில் தண்ணீரை தேக்கி வைக்கும் தடுப்பு சுவரும் உடைக்கப்பட்டுள்ளது.
இது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெரியபிராட்டி குளத்தில் மழைகாலங்களில் தேக்கி வைக்கும் தண்ணீர் புதுக்கோட்டை, கூட்டாம்புளி, சிறுபாடு, சவேரியார்புரம், சிலுவைபுரம், திருமலையாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிக்கு நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.
வெள்ள காலங்களில் தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்ற அக்கறையுடம் செய்துள்ள இந்த பணியால், குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் போவது மட்டுமில்லாமல், அத்தனை தண்ணீரும் வெளியேறும் போது ஆக்கிரமிப்பு நிறைந்துள்ள வடிகால்களில் வெளியேற முடியாமல் புதுக்கோட்டை - கூட்டாம்புளி சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தை முடக்கும் நிலை ஏற்படும்.
தடுப்பு சுவர் உயரமாக இருக்கும்போதே கடந்த சில ஆண்டுகளாக அந்த சாலையில் போக்குவரத்தை முடக்கும் அளவிற்கு தண்ணீர் தேங்கியிருந்து. தடுப்பு சுவர் உடைக்கப்பட்ட பிறகு அதிக அளவில் தண்ணீர் வெளியேறும், முறையான வடிகால் இல்லாத நிலையில் மக்களுக்கு பெரிய அளவில் இடையூறாக இருக்கும்.
இதற்கெல்லாம் மேலாக சுற்றுவட்டார பகுதி மக்களின் நீர் ஆதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படலாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு உடைத்துள்ள சுவரை மீண்டு கட்ட வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
