புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் பாஜவின் அமைச்சராக இருந்த சாய்.ஜெ.சரவணன்குமார் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அமைச்சர் பதவி அக்கட்சியை சேர்ந்த காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏ ஜான்குமாருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர், கடந்த ஜூலை மாதம் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால் 90 நாட்களாகியும் அவருக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுகுறித்து பாஜவை சேர்ந்த அமைச்சர் ஜான்குமார் கூறுகையில், புதுச்சேரி அரசில் பாஜ அங்கம் வகிக்கிறது. நாங்கள் இல்லை என்றால், ரங்கசாமி முதல்வர் கிடையாது. ஆரம்பக் காலத்திலேயே பாஜ தவறு செய்துவிட்டது. 3 அமைச்சர் பதவி கேட்டும் முதல்வர் ரங்கசாமி கொடுக்கவில்லை. நான் அமைச்சராக பொறுப்பேற்று இதுவரை இலாகா ஒதுக்கவில்லை. என்ன பிரச்னை என்று தெரியவில்லை? அவரது கட்சியை சேர்ந்த அமைச்சருக்கு 136 நாட்களுக்கு பிறகே இலாகா கொடுத்தார்.
அதுபோல் எனக்கும் கொடுப்பார் என்று தொகுதி மக்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். முதல்வர் தான் இலாகா கொடுக்க வேண்டும். அவர், நினைக்கும்போது கொடுப்பார். இலாகா ஒதுக்கீடு இல்லாததால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்று விட்டிருக்கிறேன். நான் காங்கிரசில் இருந்தேன். என்னை பாஜவினர் எப்படி எல்லாமோ அழைத்தனர். ஆனால் தொழிலதிபர் மார்ட்டின் கூறியதால் தான் பாஜவில் இணைந்தேன். இவ்வாறு அவர் கூறினார். நாங்கள் இல்லை என்றால் ரங்கசாமி முதல்வராக நீடிக்க முடியாது என பாஜ அமைச்சர் பேசி உள்ளதால், புதுச்சேரியில் ஆட்சி கவிழ்க்க திட்டமா என்று பரபரப்பு எழுந்து உள்ளது.