நீ அமைச்சரா? நான் அமைச்சரா? இன்னாள்-முன்னாள் டிஸ்யூம்...டிஸ்யூம்...புதுச்சேரி பாஜவில் பரபரப்பு; டெல்லி உத்தரவில் கவர்னர் பஞ்சாயத்து
புதுச்சேரி: புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் என்ஆர் காங்கிரசில் 3, பாஜவில் 2 அமைச்சர்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜ 6 தொகுதிகளை கைப்பற்றியதால் 2 அமைச்சர்களுடன், ஒரு சபாநாயகர் பதவியையும் பெற்றது. பின்னர் மத்தியில் ஆளும் பாஜ அரசு, அக்கட்சியைச் சேர்ந்த 3 பேரை நேரடியாக நியமன எம்எல்ஏக்காக நியமித்தது. இதனால் புதுச்சேரி சட்டசபையில் பாஜவுக்கு 12 எம்எல்ஏக்களின் பலம் கிடைத்தது. அரசுக்கு ஆதரவளித்த சுயேட்சை எம்எல்ஏக்கள் எதிர்பார்த்த வாரியத் தலைவர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தனர்.
இதற்கிடையில் நீண்ட காலமாக அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த ஜான்குமாரை திருப்திபடுத்தும் விதமாக அமைச்சர் பதவி கொடுத்துவிட்டு, பாஜ எம்எல்ஏ சாய்சரவணனிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே இருந்த 3 நியமன எம்எல்ஏக்கள் பதவி பறித்துவிட்டு புதிதாக மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. இதனால் சாய்சரவணன் விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டார். மேலும் அவரது தொகுதி உட்பட்ட தீப்பாய்ந்தானுக்கும் நியமன எம்எல்ஏ பதவி வழங்கப்பட்டது. சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த புகைச்சல் தற்போது பூதாகரமாகி உள்ளது. பாஜ ஆதரவளித்த 3 சுயேட்சை எம்எல்ஏக்களும் புதிய அணிக்கு மாறிவிட்ட நிலையில், தேஜ கூட்டணி அரசுக்கு எதிராக விமர்சனங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
அதேபோல் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சாய் ஜெ சரவணன்குமாரும் அரசு நிர்வாகத்துக்கு எதிராகவும், குறிப்பாக தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சரான நமச்சிவாயத்துக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். தென் மாநிலங்களில் ஒன்றான புதுச்சேரியில் நீண்ட காலத்திற்கு பின் பாஜ கூட்டணி அமைச்சரவையில் இடம்பிடித்திருந்த நிலையில் அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் அக்கட்சி இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் புதிய புதிய அணிகள் உருவாகி வருவதால் பாஜவில் உச்ச கட்சி பிரச்னை விவகாரம், பாஜ தலைமைக்கு புதிய தலைவலியாக உள்ளது. கட்சியின் அகில இந்திய தலைமை, கவர்னர் மூல
மாக இதுபோன்ற பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவர பாஜ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.