Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவுக்கு 4வது முறையாக அனுமதி மறுப்பு: ஒன்றரை கி.மீட்டருக்காவது அனுமதி கொடுங்க ப்ளீஸ்... முதல்வர், போலீஸ் அதிகாரிகளிடம் அழாத குறையாக கெஞ்சிய புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா

புதுச்சேரி: தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் நாளை 30 கி.மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டார். இதற்காக புதுச்சேரி டிஜிபி மற்றும் முதல்வரிடம் அனுமதி கோரி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் 3 முறை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால், கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தை காரணம் காட்டி, விஜய் ரோடு ஷோவுக்கு புதுச்சேரி அரசு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது. மீண்டும் மீண்டும் முதல்வர் ரங்கசாமியிடம் புஸ்ஸி ஆனந்த் முறையிட்டதால், காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், டிஐஜி சத்தியசுந்தரம் கூறுகையில், ‘விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதியில்லை. பொதுக்கூட்டம் நடத்த மட்டும் அனுமதி தரப்பட்டுள்ளது. அதற்கான இடத்தையும், தேதியையும் அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்’ என்றார். இந்நிலையில், நேற்று தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் முதல்வர் தலைமையில் டிஜிபி ஷாலினிசிங், ஐஜி அஜித்குமார் சிங்லா, டிஐஜி சத்தியசுந்தரம், சீனியர் எஸ்பி கலைவாணன் ஆகியோர் புதிதாக எஸ்ஐ மற்றும் காவலர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினர்.

ஆனால் தவெக ரோடு ஷோவுக்கு அனுமதியளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து அவசர, அவசரமாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் மீண்டும், முதல்வர் ரங்கசாமியை சந்திக்க வந்தனர். முதல்வர் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நிறைவடைந்ததும், உள்ளே சென்ற புஸ்ஸி ஆனந்த் ஏற்கனவே ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்ட வழித்தடத்துக்கு மாற்றாக, கிழக்கு கடற்கரை சாலையில் சிவாஜி சிலை முதல் கொக்குபார்க் வரை ஒன்றரை கிலோ மீட்டருக்காவது ரோடு ஷோ நடத்த அனுமதி தரும்படி மீண்டும் கெஞ்சினர்.

ஆனால் போலீசார் பொதுக்கூட்டம் நடத்த மட்டுமே அனுமதி என திட்டவட்டமாக மறுத்தனர். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது, நீதிமன்றத்துக்கு காவல்துறைதான் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என தெரிவித்து விட்டனர். வெளிமாவட்டத்தில் இருந்து யாரும் புதுச்சேரிக்கு வரமாட்டார்கள், நான் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்துவேன் என காவல்துறை அதிகாரிகளை சமாதானம் செய்ய புஸ்ஸி ஆனந்த் முயன்றார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் வேறுவழியின்றி மீண்டும் ஏமாற்றமாக இருவரும் வெளியே வந்தனர். அப்போது, அவர்களிடம் பொதுக்கூட்டம் நடத்துகிறீர்களா?, ரோடு ஷோவுக்கு அனுமதியா? என நிருபர்கள் சரமாரியாக கேள்வியெழுப்பியும் வாயை திறக்காமல், தலையாட்டியபடி கிளம்பிச் சென்றனர்.