புதுச்சேரியில் புதிதாக பரிந்துரைக்கப்பட்ட 3 நியமன எம்எல்ஏக்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்: புதிய அமைச்சர் ஜான்குமாருடன் வரும் 14ம் தேதி பதவியேற்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜவைச் சேர்ந்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் தனது பதவியை ஒரு வாரத்துக்கு முன்பு ராஜினாமா செய்தார். இதேபோல் பாஜ நியமன எம்எல்ஏக்களான விபி ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் புதிய அமைச்சராக அதே கட்சியைச் ஜான்குமாரை பரிந்துரைத்து கவர்னரிடம் முதல்வர் கடிதம் அளித்தார். இதேபோல் 3 புதிய நியமன எம்எல்ஏக்களாக தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
இருப்பினும் இந்த 2 நியமனங்களுக்கு ஒன்றிய அரசிடமிருந்து அனுமதி கடிதம் வராத நிலையில் அடுத்தடுத்த தேதிகள் அறிவிக்கப்பட்டும் பதவியேற்பு நடைபெறவில்லை. இந்நிலையில், நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் துணை கமாண்டன்ட் கனிஷ் சௌத்ரியிடம் இருந்து புதிய அமைச்சராக ஜான்குமாரை நியமிப்பதற்கான ஒப்புதல் கடிதம் தலைமை செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், சாய் சரவணன்குமாரின் அமைச்சரவை ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொண்டதுடன் புதிய அமைச்சராக ஜான்குமாரை நியமிக்கவும் அனுமதி அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசாணை வெளியிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலர் பிரவீன்குமார் ராஜிடமிருந்து 3 நியமன எம்எல்ஏக்களான அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதம் கவர்னர் மாளிகை, தலைமை செயலகத்துக்கு வந்தது. இதையடுத்து அமைச்சர் ஜான்குமாரும், 3 நியமன எம்எல்ஏக்களும் வருகிற 14ம் தேதி பதவியேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஜான்குமாருக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதேபோல் 3 நியமன எம்எல்ஏக்களுக்கு சட்டசபை வளாகத்தில் சபாநாயகர், பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.