புதுச்சேரியில் கஞ்சா, கள்ளச்சாராயம் தாராளம் பாஜ ஆதரவு எம்எல்ஏ புகாரில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி
புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் பேசியதாவது: புதுச்சேரியை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. முதல்வர் அலுவலகத்தில் புரோக்கர்கள் உள்ளனர் என கூறியிருந்தேன். அதே குற்றச்சாட்டை பாஜ ஆதரவு எம்எல்ஏ அங்காளனும் கூறியுள்ளார். இந்த ஆட்சியில் எந்த நலத்திட்டமும் செயல்படுத்துவதில்லை. ஊழல்தான் அதிகம் நடைபெறுகிறது. பணம் பெறாமல், எந்த கோப்பும் வருவதில்லை. புதுச்சேரியில் கஞ்சா, கள்ளச்சாராயம் தாராளமாக நடமாடுகிறது என்று எம்எல்ஏ அங்காளன் போலீசில் புகார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதியில் குறைந்த ஓட்டுகளை பெற்றுள்ளார். அதேபோல நமச்சிவாயம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் குறைந்த ஓட்டுக்கள் வாங்கி உள்ளார். மக்கள் செல்வாக்கை இழந்த பிறகும், ஏன் இரண்டு பேரும் ராஜினாமா செய்யவில்லை. புதுச்சேரியில் கோயில் சொத்துக்களை அபகரிப்பது அதிகரித்து வருகிறது. இதனை பாதுகாக்க ரங்கசாமி அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.