புதுச்சேரியில் தொழிற்சாலை நடத்தி 16 மாநிலங்களில் போலி மருந்து விற்பனை: பிரபல நிறுவன ஊழியர்கள், ஏஜென்டுகள் உதவி; அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வால்வோ கார் பரிசு; சரணடைந்த உரிமையாளர் பரபரப்பு வாக்குமூலம்
புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்து விற்பனை முறைகேட்டில் சரணடைந்த உரிமையாளர், 16 மாநிலங்களில் போலி மருந்துகளை விற்பனை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். புதுச்சேரியில் பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் போலி மாத்திரைகள் விற்கப்படுவதாக வந்த புகாரின்பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஜெயா நகரில் வசித்த திருப்பத்தூரை சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன் 3 இடங்களில் போலி மாத்திரை தொழிற்சாலை நடத்தியது தெரியவரவே மருந்து தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் அவரது குடோன்களில் சோதனை நடத்தினர்.
அங்கு பல கோடி மதிப்பிலான போலி மாத்திரைகள், மருந்து தயாரிக்கும் இயந்திரங்கள், மூலப்பொருட்களை கைப்பற்றி சீல் வைத்தனர். போலி மருந்துகள் தொழிற்சாலைகள் இயங்கிய கட்டிடம் புதுச்சேரியை சேர்ந்த அரசியல் பிரமுகர்களுக்கு சொந்தமானது. அவர்கள் அதிக வாடகைக்கு விட்டு போலி மருந்துகள் விற்பனையை கண்டு கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ரெட்டியார்பாளையம் ஜெயா நகரில் உள்ள ராஜாவின் வாடகை வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி சொத்து பத்திரங்கள், மருந்து இன்வாய்ஸ் ரசீதுகள், டைரி, பாஸ்போர்ட், ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினர். இதையடுத்து கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்பேரில் 10 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராஜா மற்றும் அரியூரைச் சேர்ந்த விவேக் ஆகியோர் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தனர். அவர்களை காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதி யஷ்வந்த்ராவ் இங்கர்சால் அனுமதி வழங்கினார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ராஜா போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு: கடந்த 2015ல் போலி சிரப் தயாரித்து கடலூரில் விற்றபோது, திருப்பாப்புலியூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நான் 6 மாதம் சிறையில் இருந்தேன்.
பின்னர், வெளியே வந்து கடந்த 10 ஆண்டுகளாக மருந்து தொழில் செய்து வந்தேன். அதில் லாபம் இல்லை. கடந்த 6 ஆண்டுகளாக போலி மருந்து விற்றதில் அதிக லாபம் கிடைத்தது. பின்னர், மருந்தியல் படித்த நண்பர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, டெல்லியை சேர்ந்த பிரபல நிறுவனத்தின் 16 மருந்து பிராண்டுகளை புதுச்சேரியில் போலியாக தயாரித்து அதை உத்தரபிரதேசம், அசாம், ஆந்திரா உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு சப்ளை செய்தேன். இந்த மோசடிக்கு பிரபல நிறுவனங்களில் பணிபுரியும் சில ஊழியர்களும், ஏஜென்டுகளும் உதவி செய்தனர். இவ்வாறு ராஜா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
போலி மருந்து சப்ளைக்காகவே 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை ராஜா வைத்திருந்தது தெரியவந்தது. அதில், பெரும்பாலான வங்கிக் கணக்குகளை சிபிசிஐடி போலீசார் உடனடியாக ஆய்வு செய்தனர். ஆனால், அதில் பணம் எதுவும் இல்லை. ஆனால், மேற்கூறிய வங்கி கணக்குகள் மூலமாக கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியது. அதில், யார், யாருக்கு எவ்வளவு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்த விவரங்களை சேகரித்த போலீசார், கைப்பற்றிய டைரியில் 15 வால்வோ வாகனங்களை வாங்கியது பற்றி துருவித் துருவி விசாரித்தனர். இந்த கார்கள் அரசியல்வாதிகளுக்கு வழங்க வாங்கப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது, அதை மறுத்த ராஜா, டிராவல்ஸ் நடத்த வாங்கியதாக கூறினார். இதனால், அந்த கார்கள் யார் பெயரில் உள்ளது, முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* வடமாநில போலீசார் விசாரிக்க முடிவு
ராஜா மற்றும் விவேக் ஆகியோர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தது பற்றி வடமாநில போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உத்தரபிரதேசம் ஆக்ரா, மிசாப்புரா போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக ஓரிரு நாளில் புதுவை வரும் அவர்கள், 2 பேரையும் தங்களது மாநிலத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதனிடையே, வடமாநிலங்களில் சப்ளை செய்யப்பட்டுள்ள போலி மருந்துகளை அங்கு விற்பனை செய்ய தடைவிதிக்க கோரி புதுச்சேரி மருந்து தரக் கட்டுப்பாட்டு துறை மூலம் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு கடிதம் அனுப்பவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
* மேலும் 10 பேர் கைது
போலி மருந்து வழக்கில் தொழிற்சாலை உரிமையாளர் ராஜாவில் கூட்டாளிகள் பலரை போலீசார் பிடித்து விசாரித்த நிலையில், புதுச்சேரியை சேர்ந்த செந்தில்குமார் (39), இமானுவேல் (42), சிவராந்தகம் விவேக் (40), அந்தோணிராஜ் (33), கிருஷ்ணமூர்த்தி (56), பிரபாகரன் (35), கடலூரை சேர்ந்த விக்னேஷ்குமர் (33), காட்டுமன்னார்கோயில் விக்னேஷ் (33), செல்லஞ்சேரி அருள் (40), மவுனிராஜ் (25) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் போலி மருந்து வழக்கில் எந்தெந்த வகையில் உடந்தையாக இருந்தனர் என்பதற்கான ஆவணங்களை சேகரித்து வருகின்றனர். இதனால், மேலும் பலர் கைதாவார்கள் என்று கூறப்படுகிறது.
* தமிழ்நாடு, புதுச்சேரியிலும் விற்பனையா?
போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளரான ராஜாவிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையின்போது தமிழகம், புதுச்சேரியில் 2023லேயே மருந்து பொருட்கள் விற்பனையை நிறுத்திவிட்டதாகவும், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கே சப்ளை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். எனினும் இதுதொடர்பாக மருந்து கட்டுப்பாட்டுத்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என புதுவை மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


