* சென்னையைச் சேர்ந்த 2 பேர் கைது
* கார், பணம், லேப்டாப் பறிமுதல்
புதுச்சேரி : இன்சூரன்ஸ் பெயரில் லோன் தருவதாக மோசடி செய்த சென்னை வாலிபர்கள் 2 பேரை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி கொடாத்தூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து வங்கியில் இருந்து பேசுவதாகவும், குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் லோன் தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த நபர் அவருடைய ஆதார், பான்கார்டு, பேங்க் புக் ஆகியவற்றை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.
அதன் பிறகு அவர்கள் வங்கி பரிவர்த்தனை சரிபார்த்ததில் லோன் தருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லாததால் தாங்கள் ரூ.54 ஆயிரத்து 340 இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தால் அதன் மூலமாக லோன் பெறமுடியும் என உறுதியளித்துள்ளனர்.
அதனை நம்பி அவரும் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். பணத்தை அவர்கள் அனுப்பிய லிங்கின் மூலம் செலுத்தியுள்ளார். கூறியபடி பணத்தை செலுத்தி சிறிது நாட்கள் கழித்தும் எந்தவித லோனும் கிடைக்கவில்லை. அவர் திரும்பவும் தொடர்பு கொள்ளும் போது மேற்கொண்டு ரூ.36 ஆயிரத்து 575க்கு முதலீடு செய்ய சொல்லி கேட்டுள்ளனர். இப்படியாக கூறி அவரிடமிருந்து ரூ.6 லட்சத்து 76 ஆயிரத்து 958 வரை பணம் செலுத்திய பிறகும் அவருக்கு எந்தவித லோனும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக அந்த நபர் புதுவை இணையவழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் சீனியர் எஸ்பி நித்யா ராதாகிருஷ்ணன் உத்தரவின்படி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். முதல் கட்ட விசாரணையில் குற்றவாளிகள் சென்னையில் இருப்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் இந்த மோசடியை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கோபி கிருஷ்ணன் (36) மற்றும் டீம் லீடர் சின்னராஜ் (33) ஆகியோரை கைது செய்து புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் அந்த கம்பெனியில் சுமார் 60க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்வதாகவும், அவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தனிப்பட்ட லைப் இன்சூரன்ஸ் கம்பெனியின் பெயரை பயன்படுத்தி லோன் தருவதாக பேசி பலரை ஏமாற்றியுள்ளதும் தெரிந்தது.
அவர்கள் ஒரு செல்போன் நம்பரின் கடைசி சில எண்களை மட்டும் மாற்றி, மாற்றி அதன் மூலம் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்களிடம் ஏற்கனவே பாலிசி ஏதேனும் போட்டு இருக்கிறீர்களா? உங்களுக்கு பாலிசிய ஏதாவது போட வேண்டுமா? என்று கேட்பார்கள். அவர்கள் அதற்கு ஒத்துவரவில்லை என்றால் அவர்களுக்கு குறைந்த வட்டியில் லோன் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க செய்கின்றனர்.
இதுபோன்று வாடிக்கையாளரிடம் பேசுவதற்காக அதிக சிம் காடுகளை தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களின் ஆதார் கார்டை பயன்படுத்தி சிம் கார்டுகள் வாங்கியுள்ளனர். அந்த சிம் கார்டுகளை பயன்படுத்தியே வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டதும் தெரியவந்தது. ரூ.3 லட்சம் லோன் கேட்பவர்களிடம் ரூ.30 ஆயிரமும், ரூ.5 லட்சம் லோன் கேட்பவரிடம் ரூ.35 முதல் ரூ.40 ஆயிரமும் பணம் பெற்று அதை ப்ராசஸ் செய்வதாக கூறி பணத்தை செலுத்த வைத்து ஏமாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கார், 4 லேப்டாப், 13 செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி புத்தகம் மற்றும் ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் ஆகியவை செய்யப்பட்டது. பிறகு கைது செய்யப்பட்ட கோபிகிருஷ்ணன், சின்னராஜ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


