Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுச்சேரியில் பேராசிரியரிடம் ரூ.54.42 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது..!!

புதுச்சேரி: பங்குசந்தையில் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி பேராசிரியரிடம் ரூ.54.42 லட்சம் மோசடி செய்த வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியை சேர்ந்தவர் ராஜகுமாரன். ஓய்வுபெற்ற அரசு கல்லூரி பேராசியரான இவர், பேஸ்புக்கில் பங்குசந்தை விளம்பரம் ஒன்றை பார்த்து, அதில் இருந்த லிங்கை கிளிக் செய்து, வாட்ஸ்அப் குருப்பில் சேர்ந்துள்ளார். இதையடுத்து ராஜகுமாரனை, மஞ்சு பட்சிசா என்பவர் வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொண்டு டெலிகிராம் குரூப்பில் சேர்த்து, பங்குசந்தையில் 83 சதவீதம் லாபம் பெற்று தருவதாக கூறியுள்ளார்.

மேலும், எஸ்பிஐஎஸ் என்ற ஆப் லிங்க்கையும் அனுப்பி பதிவிறக்கம் செய்து முதலீடு செய்யுமாறு தெரிவித்துள்ளார். அதனை உண்மை என நம்பிய ராஜகுமாரன் அதில் ரூ.54.42 லட்சத்தை முதலீடு செய்துள்ளார்.இதையடுத்து அவர் பதிவிறக்கம் செய்த ஆப்பில் லாபத்துடன் சேர்த்து ரூ.96 லட்சத்து 3 ஆயிரத்து 669இருப்பதாக காட்டியுள்ளது. ஆனால் அந்த பணத்தை ராஜகுமாரன் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. அதன்பிறகுதான் அவருக்கு அது போலி பங்குசந்தை என தெரிந்தது. அதிர்ச்சியடைந்த ராஜகுமாரன் உடனடியாக இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைமில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் அசாமை சேர்ந்த அஜிபுர் ரகுமான் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அசாம் விரைந்த சைபர் கிரைம் போலீசார், அஜிபுர் ரகுமானை கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று புதுச்சேரி அழைத்து வந்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மீது ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட மோசடி புகார்கள் இருப்பதும், அவரது சசோதரர் வங்கிக்கணக்கில் ரூ.2.50 கோடி பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து ஒரு சிம்கார்டு, 3 செல்போன்கள், வைபை இன்டர்நெட், 2 லேப்டாப், ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.