புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜவை சேர்ந்த அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார் தனது பதவியை கடந்த 27ம் தேதி ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து பாஜவை சேர்ந்த நியமன எம்எல்ஏக்களான வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
ராஜினாமா செய்த சாய். ஜெ. சரவணன் குமாருக்கு, பதிலாக காமராஜர் நகர் தொகுதி பாஜ எம்எல்ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவிக்கு ரங்கசாமி பரிந்துரை செய்தார். அதேபோல் ராஜினாமா செய்த 3 எம்எல்ஏக்களுக்கு பதில் முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான், காரைக்காலை சேர்ந்த ஜிஎன்எஸ் ராஜசேகரன், முதலியார்பேட்டை செல்வம் ஆகியோரை நியமன எம்எல்ஏக்களாக ஒன்றிய அரசு நியமித்தது.இவர்களுக்கு சபாநாயகர் செல்வம், நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய அமைச்சர் ஜான்குமார் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் நேற்று மதியம் நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் அமைச்சர் ஜான்குமாருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஜான்குமாருக்கு, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.