Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் நேற்று வீடுகளில் விஷவாயு கசிந்து மாணவி உள்பட 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சம்பவம் நடந்த இடத்தில் முதல்வர் ரங்கசாமி, எம்பி, அமைச்சர், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆய்வு நடத்தினர். கழிவறைக்குகூட செல்ல முடியாத அவலத்தில் இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவும், நேற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

விஷவாயு தாக்கி 3 பேர் பலியான விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமையிலும், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் தலைமையிலும் 2 விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. முதல்கட்டமாக செயற்பொறியாளர் உமாபதி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய ஒப்பந்ததாரரான வெங்கட்டிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

பலியான 3 பேரின் உடலும் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மதியம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த ரெட்டியார்பாளையம் புதுநகர் 6வது தெருவில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளி நேற்று திறக்கப்பட்ட போதிலும் வந்த 4 மாணவர்களும் உடனடியாக வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதேபோல் அருகிலுள்ள தனியார் பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு பாஜ கூட்டணி அரசு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் நேற்று மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 53 பேரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.