புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்களின் வேலை நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து புதுச்சேரிஅரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணி புரியும் பெண்களின் வேலை நேரம் தொடர்பாக 1948ம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தில் உள்ள சில கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த மாதம் 6ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. பெண்கள் இரவு பணியில் 7 மணி வரை மட்டுமே பணி செய்ய அனுமதித்த நிலையில் தற்போது இரவு 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், முன்னர் அனுமதிக்கப்பட்ட வேலை நேரம் இரவு 7:00 மணியிலிருந்து இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு முன், பெண்கள் இரவு ஷிப்டுகளில் இரவு 7:00 மணி வரை மட்டுமே வேலை செய்ய முடியும்.
இதன் மூலம், தொழிற்சாலைகளில் இரவு நேரப் பணிகளின் போது பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் வேலை தொடர்பான நெகிழ்வுத்தன்மையை அதிகரித்துள்ளது. பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனைப் பேணுவதோடு, சம வாய்ப்புகளை ஊக்குவித்தல், பாலின சமத்துவத்தை உறுதி செய்தல், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார பங்களிப்பை செயல்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு புதுச்சேரி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை எந்தப் பெண்ணையும் பணியமர்த்தக் கூடாது என்றும், பணியிடத்தில் இருந்து பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்ய, இலவச போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

