புதுச்சேரி: புதுச்சேரி மின் துறையை தனியாருக்கு ஒப்படைப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான மின்சாரத் துறையை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மெல்ல மெல்ல எடுக்கப்பட்டு, முதல் கட்டமாக யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே புதுச்சேரி மாநிலத்தில் மின் துறையை தனியார் மயமாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கு தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக சட்டமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விக்கு 'தனியார் மயமாக்கப்படாது' என்று அரசு தெரிவித்தது. துறை அமைச்சரும் உறுதியளித்துள்ளார்.
ஆனால் தற்போது, தனியார் மயமாக்குவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், 2024-ல் தொடங்கப்பட்ட புதுச்சேரி மின் விநியோக லிமிடெட் கம்பெனி மூலம் 100% பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாகவும், அந்த 100 சதவீத பங்குகளை ஒரு தனியார் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் அறியப்படுகிறது. 'அதானி எலக்ட்ரிசிட்டி புதுச்சேரி லிமிடெட்' என்ற பெயரில் பங்கு சந்தையில் அனுமதி கேட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்திடம் மின்துறையை ஒப்படைக்க ஏதுவாக குத்தகை ஒப்பந்த தேதி கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் புதுச்சேரி அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து மின் துறைக்கு ரூ.1000 கோடி செலவு செய்துள்ளது. ரூ.30 ஆயிரம் கோடிக்கு சொத்து மதிப்புடன் லாபகரமாக இயங்கி வரும் சூழலில், லாபத்தில் இயங்கும் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பு செய்வது சரியானதல்ல. மின் துறையை தனியாருக்கு விட்டால் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்வதில் தனியார் நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவார்கள். சேவையில் குறைபாடு ஏற்படும். தனியார்மய ப்ரீபெய்டு மீட்டர் திட்டத்தினால் அத்தியாவசிய தேவையான மின்சாரத்தை நுகரும் பொருள் நிலையில் பெற வேண்டியிருக்கும். பணம் கட்டி உடனடியாக ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் மின் சேவையை எந்த நேரத்திலும் துண்டிக்கும் சூழல் வரும்.
கடந்த காலங்களில் புதுச்சேரி மாநிலத்தில் நன்றாக இயங்கிய பல தொழிற்சாலைகள் நிர்வாக குளறுபடிகளால் தற்போது மூடப்பட்டு வருகின்றன. மின்சாரத்துறை தனியார்மயம் ஆக்கப்பட்டால் மேலும் பல தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்கள் முறையிட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்படும் சூழலில் மக்களுக்கான வேலை வாய்ப்புகள் குறையும் சூழல் உருவாகும். இதனால் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும். அத்தோடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மற்றும் குறைவான மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகை கட்டணமும் பறிக்கப்படும். எனவே, மத்திய அரசும், புதுச்சேரி அரசும் மின் துறையை தனியாருக்கு ஒப்படைக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.