Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசின் கார்ப்பரேட் சார்பு கொள்கைகளுக்கு எதிர்ப்பு நாளை நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம்: 25 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: நாளை நடைபெற உள்ள நாடு தழுவிய அளவிலான பொதுவேலை நிறுத்தப்போராட்டத்தில் சுமார் 25கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடும். தொழிலாளர் சங்கம் சார்பாக கடந்த ஆண்டு தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் 17 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது.

ஆனால் இது தொடர்பாக இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கார்ப்பரேட் சார்பு பொருளாதார சீர் திருத்தங்கள் மற்றும் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து பத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் இணை அமைப்புக்கள் நாளை நாடு தழுவிய அளவில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\\” நாடு தழுவிய அளவிலான பொது வேலைநிறுத்தத்தை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவதற்கு தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் முறையான மற்றும் முறைசாரா/அமைப்புசாரா பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் உள்ள தொழிற்சங்கங்களால் வேலை நிறுத்தப்போராட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த 10 ஆண்டுகளாக அரசு தொழிலாளர் ஆண்டு மாநாட்டை அரசு நடத்தவில்லை. தொழிலாளர் நலனுக்காக முரணான முடிவுகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது.

கூட்டு பேரம் பேசுவதை பலவீனப்படுத்தவும், தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளை முடக்கவும், வணிகம் செய்வதை எளிதாக்குதல் என்ற பெயரில் முதலாளிகளுக்கு சாதகமாகவும் நான்கு தொழிலாளர் குறியீடுகளை விதிக்க முயற்சிக்கின்றது. அரசானது நாட்டின் நலனில் கவனம் செலுத்தாமல் வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவனங்களின் நலனுக்காக செயல்பட்டு வருகின்றது. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொது சேவைகளை தனியார்மயமாக்குதல், அவுட்சோர்சிங் கொள்கைகள், ஒப்பந்ததாரர்மயமாக்கல் மற்றும் பணியாளர்களை தற்காலிகமாக்குதல் ஆகியவற்றுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி, காப்பீடு, தபால்துறை முதல் நிலக்கரி, சுரங்கம், நெடுஞ்சாலை மற்றும் கட்டுமானம் வரையிலான பல்வேறு துறைகளை சேர்ந்த 25கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசை சேர்ந்த அமர்ஜீத் கவுர் கூறுகையில்,”நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்தில் 25கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்பார்கள். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களும் போராட்டத்தில் இணைவார்கள்” என்றார்.

இதேபோல் ஹிந்த் மஸ்தூர் சபாவை சேர்ந்த ஹர்பஜன் சிங் சித்து, “வேலை நிறுத்தப்போராட்டத்தினால் வங்கி, அஞ்சல், நிலக்கரி சுரங்கம், தொழிற்சாலைகள், மாநில போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படும்” என்றார். இந்நிலையில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தாங்களும் பங்கேற்பதாக வங்கி ஊழியர்கள் சங்கங்கள் நேற்று தெரிவித்துள்ளது. ஏஐபிஇஏ, ஏஐபிஓஏ மற்றும் பிஇஎப்ஐ உள்ளிட்ட வங்கித் துறை தொழிற்ச்சங்கங்கள் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தப்போராட்டத்தில் சேருவதற்கு முடிவு செய்துள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்துடன் இணைந்த வங்காள மாகாண வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் காப்பீடு துறையும் சேருவதற்கு முடிவு செய்துள்ளதாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.